வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பி.எஸ்.எம்.சாள்ஸ் காலை 9.20 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(22) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது தடவையாக வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மே 15ம் திகதி ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டநிலையில் மே 17 ம் திகதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
உள்ளூராட்சி தேர்தலை சீர்குலைக்கும் அரசின் நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்ததால், சாள்ஸூக்கு மீண்டும் ஆளுனர் பதவிவழங்கப்பட்டுள்ளதாக பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
இதுதவிர, பி.எஸ்.எம்.சாள்ஸ் கடந்த காலத்தில் மிக மோசமான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர், அவர் சட்டநடவடிக்கைக்கு உள்ளாகமல் எப்படி தொடர்ந்து பதவிஉயர்வுகளை பெற்று வருகிறார் என்றும் சமூகவலைத்தளங்களில் பலராலும் ஆச்சரியம் வெளியிடப்படுகிறது.
சாள்ஸின் ஊழல்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரது ஆளுனர் நியமனத்தை இரத்து செய்ய வேண்டுமென அண்மையில் ஆளுனர் செயலகத்துக்கு முன்பாக போராட்டமும் நடந்தது.