தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள் சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்படுவதற்கு, வலி வடக்கு பிரதேசபையின் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அப்போதைய தவிசாளர் சோ.சுகிர்தனின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்பதை நேற்று விலாவாரியாக குறிப்பிட்டிருந்தோம்.
தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக காணி அபகரிக்கப்படும் விவகாரத்தை 2019 ஜூலை 15ஆம் திகதி, சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் கடிதம் மூலம், பிரதேசசபை தவிசளருக்கும், செயலாளருக்கும் அறிவித்திருந்தார்.
எனினும், தவிசாளர் சோ.சுகிர்தன், தவிசாளராக தனது கடமையை முறையாக ஆற்றாததால், விகாரை அமைக்கப்படும் சூழல் உருவானது.
விகாரை தொடர்பில் தவறான கருத்துக்களை குறிப்பிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் அவர் செயற்பட்டதால், விகாரை அமைப்பவர்களுக்கு எந்த நெருக்கடியுமின்றி செயற்படும் வாய்ப்பு ஏற்பட்டது.
படைத்தரப்பு, ஆட்சியாளர்களின் கோபத்தை சம்பாதிக்கக் கூடாது என்பதாலா, அல்லது அதன் தார்ப்பரியம் புரியாமலா அல்லது வேறு ஏதேனும் காரணங்களினாலா அவர் அப்படி செயற்பட்டார் என்பது தெரியவில்லை.
சபை அமர்வு ஒன்றின் போது, அனுமதியின்றி அமைக்கப்படும் விகாரைப் பணிகளை இடைநிறுத்தும்படி கடிதம் அனுப்புமாறு பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சஜீவன் கேட்டுக் கொண்டார்.
இதன்போது, தவிசாளர் தவறான தகவலொன்றை சபையில் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தை மேலெழ விடாமல் தடுத்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையில் அனுமதி பெற்று விகாரை அமைக்கப்படுகிறது என தவிசாளர் குறிப்பிட்டார். இது தொடர்பாக பிரதேசசபையில் பேணப்படும், கூட்ட குறிப்புக்களை தமிழ்பக்கம் பெற்றது.
அது தவறான தகவல் என்பது பின்னர் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் உறுதியானது. விகாரைக்கான எந்த அனுமதியும் வழங்கவில்லையென நகர அபிவிருத்தி அதிகாரசபை உறுதி செய்துள்ளது.
இத தவிர, தற்போது தையிட்டியில் போராட்டம் நடக்குமிடத்துக்கு வந்த காணி உரிமையாளர் ஒருவர், தான் 3 வருடங்களின் முன்னரே வலி வடக்கு தவிசாளரிடம் தனது காணி உறுதியை வழங்கியதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பாக, மாவை சேனாதிராசாவின் மகன் சே.கலையமுதன் ஒருமுறை கேள்வியெழுப்பிய போது, விகாரை அமைந்துள்ள பகுதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளதால் தம்மால் நடவடிக்கையெடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். இதன்போதும் காணி உரிமையாளரை கண்டுபிடிக்க முடியவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் மற்றொரு உறுப்பினரான கைலைவாசன் சீதாராமன், பொதுநலன் வழக்கு தொடரலாமா என்றும் யோசனை தெரிவித்தார்.
இவை எதற்கும் தவிசாளர் உடன்படவில்லை.
மிகச்சாதாரணமாக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலே விகாரை அமைக்கப்படுவது இடைநிறுத்தப்பட்டிருக்கும். என்றாலும், வலி வடக்கு தவிசாளர் அவ்வளவு “அரசியல் பொறுப்புணர்வு“ மிக்கவராக இருந்திருக்கவில்லை. வலி வடக்கு பிரதேசசபையின் பெரும்பாலான உறுப்பினர்களும் ஒரு அளவுக்கு மீறி இதில் அக்கறை செலுத்தவில்லையென்பதே உண்மை.
சோ.சுகிர்தன் கடந்த சில காலமாகவே எம்.ஏ.சுமந்திரன் அணியில் உள்ளவர். இந்த விவகாரம் பற்றிய தெளிவும், தடுக்க வேண்டுமென்ற நோக்கமும் இருந்திருப்பின் சுலபமாக வழக்கு தொடர்ந்திருக்க முடியும்.
இனிமேல் சட்ட நடவடிக்கைகளின் மூலம் அந்த விகாரையை அகற்ற முடியாது. தேவையேற்படின் காணிக்குரியவர்கள் இழப்பீடே பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விவகாரத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்கள், குற்றம்சாட்டுபவர்கன் என தமிழ் சமூகத்தின் அனைத்து கூறுகளிலும் தவறுள்ளது என்பதே உண்மையாகும். என்ன, விகிதங்கள் வித்தியாசப்படும்.
இப்பொழுது கட்சிகள் மீது மாறி மாறி குற்றம்சுமத்துவதை தவிர்த்து, கூட்டுப்பொறுப்புணர்வுடன் நடப்பதே எஞ்சிய நிலங்களை பாதுகாப்பதற்கான வழியாகும்.