வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் அவரின் மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில் தற்போது அத்திக் அகமது சுட்டுக்கொலைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு அத்திக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். நிருபர்கள் உடன் பேசிக்கொண்டு செல்லும்போதே பத்திரிகையாளர்கள் போல வந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.
கொலை செய்யப்பட்ட அத்திக் அகமதுவின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா கூறுகையில், மக்கள் கூட்டத்தில் இருந்து யாரோ சிலர் அகமது மற்றும் அவரது சகோதரர்மீது மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டார் எனத் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் மிஸ்ரா அகமது சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர்களுடன் நின்று கொண்டிருந்தார்.
“பத்திரிகையாளர்கள் அதீக் அகமதுவின் பைட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தனர். பத்திரிகையாளர்கள் போல் மாறுவேடத்தில் மூன்று பேர் வந்தனர். அதீக் மற்றும் அஷ்ரப் ஆகியோர் கொல்லப்பட்டனர். பத்திரிகையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒரு போலீஸ் கான்ஸ்டபிளும் காயமடைந்தார். விசாரணை முடிந்ததும், கூடுதல் தகவல்கள் வழங்கப்படும்” என்று பிரயாக்ராஜ் போலீஸ் கமிஷனர் ரமித் சர்மா கூறினார்.
தாக்குதல் நடத்தியவர்கள் கைகளை உயர்த்தி தாமாகவே பொலிசாரிடம் சரணடைந்தனர்.
முன்னதாக அத்திக் அகமதுவின் மகன் பொலிசாரால் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை முதல்வர் யோகி அதித்யநாத் பாராட்டியிருந்தார்.
முன்னதாக கடந்த மாதம் அத்திக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இரண்டு நாளில் தந்தையும், அவரின் சகோதரரும் கொலை செய்யப்பட்டுள்ளது உத்தர பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
#AtiqueAhmed और अशरफ़ अहमद की हत्या का वीडियो! pic.twitter.com/O58AzcgQwN
— Prashant Umrao (@ippatel) April 15, 2023
வழக்கின் பின்னணி
கடந்த 2005ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது உள்ளிட்டோர் மீதுகுற்றம் சாட்டப்பட்டது. கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக வழக்கறிஞர் உமேஷ் பால் இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அவர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப் பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அத்திக் அகமது உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உமேஷ் பால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கிலும் அத்திக் அகமது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த சூழலில் உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் உமேஷ் பால் கடத்தல் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக, குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அத்திக் பலத்த பாதுகாப்புடன் பிரயாக்ராஜ் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
17 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் நீதிபதி தினேஷ் சந்திர சுக்லா தீர்ப்பினை வழங்கினார். இதன்படி முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது, அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் அத்திக் அகமதுவின் தம்பி காலித் அசிம் உட்பட 7 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
ஐந்து முறை எம்எல்ஏவாகவும் ஒருமுறை எம்பியாகவும் பதவி வகித்துள்ள அத்திக் அகமது மீது 101 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.