சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளிற்குட்பட்டு, பொதுமக்கள் மீது அரசாங்கம் சுமத்தியுள்ள வரிச்சுமையால் மக்கள் பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வரும் நிலையில், வீதிகளில் பயணிக்க கட்டணம் அறவிடும் நடைமுறையை அமுல்ப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அரசாங்கம் விரைவில் வீதிப் பராமரிப்பு நிதியை உருவாக்கவுள்ளாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து பிரதான மற்றும் மாகாணங்களுக்கிடையிலான சாலைகளையும் கட்டணச் வீதிகளாக மாற்ற ஆரம்ப நிதியாக ரூ.100 மில்லியன் ஒதுக்கப்படவுள்ளது.
முறையான வீதிப் பராமரிப்பை உறுதி செய்வதற்கும், வீதி நிர்மாணம் மற்றும் பராமரிப்புக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய செலவினங்களைக் குறைப்பதற்கும் ஏனைய நாடுகளுக்கு இணையாக வீதிப் பராமரிப்பு நிதியை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வீதிப் பராமரிப்பு நிதியம் நிறுவப்பட்ட பிறகு, வீதியைப் பயன்படுத்துபவர்கள்- முக்கியமாக வாகன ஓட்டிகள் வீதிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
கிராமப்புற மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான சாலைகளின் சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கான 2022 இல் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.375 பில்லியன். இது அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கான ஒதுக்கீட்டை விட அதிகமாகும்.
வீதிப் பராமரிப்பு நிதியம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) கீழ் ஸ்தாபிக்கப்படும். இதன்மூலம், ஏற்கனவே உள்ள வீதிகளை பராமரித்து புதுப்பிக்கவும் மற்றும் புதிய வீதிகள் மற்றும் பாலங்கள் நிர்மாணிக்கப்படும். RDA இன் கீழ் இப்போது 25,000Km கிராமப்புற, மாகாணங்களுக்கு இடையேயான வீதிகள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
ஆட்சியாளர்களின் முறையற்ற நிர்வாகத்தால், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தற்போது நாட்டில் வீதி அபிவிருத்தி பணிகள் நடப்பதில்லையென்பது குறிப்பிடத்தக்கது.