அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 76 வயதான ட்ரம்ப் அவற்றை மறுத்துள்ளார். தன் மீது அரசியல் ரீதியாக தாக்குதல் நடத்தப்படுவதாக ஆதரவாளர்கள் மத்தியில் கூறினார்.
தமக்கிடையிலான உறவை பகிரங்கப்படுத்தாமலிருக்க ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்குப் (Stormy Daniels) பணம் கொடுத்ததுதொடர்பில் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
அவர் வர்த்தகப் பதிவுகளில் மோசடி செய்ததாகவும் அவற்றில் சிலவற்றை வரி தொடர்பில் தவறாகச் சித்திரித்ததாகவும் குற்றச்சாட்டு கூறுகிறது.
நியூயோர்க் நகரில் அவை கடுமையான குற்றச்சாட்டுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
நேற்று மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ட்ரம்ப், பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் மீது 34 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
முன்னதாக ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 130,000 டொலர் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. குற்றப்பத்திரத்தில், மற்றொரு அழகிக்கு பணம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிளேபோய் மொடல் அழகி கரேன் மெக்டௌகல் (Karen McDougal) என்பவருக்கு 150,000 டொலர் செலுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எந்தவித முன்-விசாரணை கட்டுப்பாடுகளும் இல்லாமல் காவலில் இருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டார்.
வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கலாம் என்று நீதிபதி கூறினார்.
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டிகளும் அப்போதுதான் தொடங்கியிருக்கும்
நியூயோர்க் நகர நீதிமன்றத்திற்கு வந்திருந்த ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை அமைதியாகக் கேட்டார்.
அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்த பின்பு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.
ட்ரம்பின் வழக்கறிஞர்கள் அந்தக் குற்றச்சாட்டுகள் ஏமாற்றம் தருவதாகக் கூறினர்.
கடுமையான போராட்டத்துக்குத் தயார் என்றும் அவர்கள் அறிவித்தனர்.
நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய பின் ஊடகங்களிடம் பேசிய ட்ரம்ப், ஜோ பிடன் நிர்வாகத்தை கடுமையாக தாக்கி, அமெரிக்கா நரகத்திற்கு போகிறது என்றும், உலகம் ஏற்கனவே பல காரணங்களுக்காக நாட்டைப் பார்த்து சிரிக்கிறது என்றும் கூறினார்.
“எங்கள் தேசத்தை அழிக்க முற்படுபவர்களிடம் இருந்து அச்சமின்றி பாதுகாப்பதுதான் நான் செய்த ஒரே குற்றம்” என்று டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
“அமெரிக்காவில் இது நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை,” என்று டிரம்ப் தனக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் கூறினார்.