எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும், ஏனைய ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த அல்லது அத்தியாவசிய சேவை கட்டளைகளை மீறும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயற்பாட்டாளர் அல்லது ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தனது ருவிட்டர் பதிவில், “வேலை நிறுத்தம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும், மற்ற ஊழியர்களின் பணியை சீர்குலைக்கும் அல்லது அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறி செயல்படும் தொழிற்சங்க ஆர்வலர் அல்லது ஊழியர்களுக்கு எதிராக தேவையான எந்தவொரு சட்ட நடவடிக்கைகளையும் பரிசீலிக்க தேவையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம் இன்று மாலை கொலன்னாவையில் உள்ள எண்ணெய் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


