வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வர் ஆலயம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும், ஆலயத்தை மீள அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி ஆலயம் இடித்தழிக்கப்பட்ட அட்டூழியம் தொடர்பில் நேற்று மாலை, மாவை சேனாதிராசாவினால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் சைவர்களின் உரிமையை பறிக்கும் செயல் என்றும், ஆலயத்தை மீள அமைத்துக் கொடுக்க வேண்டுமென்றும் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, ஜனாதிபதியின் செயலாளர் உடனடியாக மாவை சேனாதிராசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனாதிபதியின் பதிலை தெரிவித்தார்.
ஆலயம் உடைக்கப்பட்டது தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்க பணித்துள்ளதாகவும், அந்த இடத்தில் மீளவும் விக்கிரமங்களை நிலைநாட்டி, முன்னர் இருந்ததை போலவே அமைக்குமாறும் பணித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், அடுத்த வாரம் மாவை சேனாதிராசாவுடன், ஜனாதிபதி நேரடியாக சந்தித்து பேச விரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான திகதி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும்.