மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் திங்கட்கிழமை (27) 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் சுங்காவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
பலியானவர் முகம்மட் அன்பாஸ் (17) என்ற மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை பக்கமாக வந்துகொண்டிருந்த வான், துவிச்சக்கரவண்டியில் வந்து கொண்டிருந்தவர் மீது மோதி விட்டு தப்பியோடியுள்ளது. வானின் இலக்கத்தகடு கழன்று கீழே விழுந்துள்ளது.
துவிச்சக்கர வண்டியில் வந்த இளைஞரே கொல்லப்பட்டுள்ளார்.
இளைஞரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-வ.சக்திவேல்-