இரண்டு பக்க குற்றப்பத்திரிக்கைக்கு 25 பக்கங்களில் பதில் அளிக்கப்பட்டதாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவாக செயற்படுவதே இந்தக் குற்றப்பத்திரிகைக்குக் காரணம் எனத் தோன்றுவதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (28) தெரிவித்தார்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐந்து குற்றச்சாட்டுகளுடன் குற்றப்பத்திரிக்கையில் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவித்த ரத்நாயக்க, சில குற்றச்சாட்டுகள் ஆச்சரியமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை காலத்தில் மின்சாரம் வழங்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தமை முதலாவது குற்றச்சாட்டாகவும், அவ்வழக்கில் தனது அதிகாரத்தை மீறி தன்னிச்சையாகச் செயற்பட்டமை இரண்டாவது குற்றச்சாட்டு எனவும் அவர் தெரிவித்தார்.
மூன்றாவது குற்றச்சாட்டாக மின்சாரம் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரத்நாயக்க தெரிவித்தார். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை இலக்கு வைத்து அறிக்கைகளை வெளியிட்டதாகவும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் அவர் தெளிவான பதில்களை வழங்கியதாகவும் ஐந்தாவது குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமானால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சுயாதீன ஆணைக்குழு என்ற வகையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மக்களுக்காக செயற்பட்டதாகவும், சுயாதீன ஆணைக்குழுக்களை அரசாங்கம் கையாளும் விதத்தை இந்தக் குற்றப்பத்திரிகையில் இருந்து அறிந்து கொள்ள முடியும் எனவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.