அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நாளை (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து, பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதி கே.குமரேஷ்பாபு, கடந்த மார்ச் 22ஆம் திகதி 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தார். ஓபிஎஸ், இபிஎஸ் என இருதரப்பிலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று அவர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதிமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நாளை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.