‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தப்பிச் செல்ல வசதியேற்படுத்தும் நோக்கத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய நான்கு பெண்களை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் தப்பியோடிய சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நான்கு பெண்கள் தடிகளால் தாக்கியதில் காயமடைந்த கந்தளாய் பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் பண்டார நவரத்ன உள்ளிட்ட குழுவொன்று புதன்கிழமை (23) கந்தளாய் பகுதியொன்றில் சுற்றிவளைப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய நபரை மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்ற பொலிஸார், தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்துக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளனர். அவரை சோதனையிட்டபோது, அவரிடம் இருந்த ஐஸ் போதைப்பொருள் சிறிதளவு கிடைத்தது. அவரை கைவிலங்கிட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவரது உறவினர்களான பெண்கள் குழுவொன்று அங்கு வந்து பொலிசாரை சரமாரியாக தாக்கினர். பொலிசார் மீது தடியடி நடத்தி கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிசார் இது தொடர்பில் கந்தளாய் மற்றும் தம்பலகாமம் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்தனர். பின்னர், தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் வந்து கந்தளாய் பொலிஸாரினால் முன்னர் கைது செய்யப்பட்ட நபரை கைது செய்தனர்.
முள்ளிப்பொத்தானை யூனிட் 07 பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.நுருல்லா (வயது 47) என்ற நபரே கைது செய்யப்பட்டிருந்தார்.
பொலிசாரை தாக்கி சந்தேக நபரை தப்பிக்க வைத்த நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டனர். முள்ளிப்பொத்தானை யூனிட் 07 பகுதியைச் சேர்ந்த என்.நிஃப்ரா (18), ஏ.ஜஹானா (19), ஏ.ஆர்.சித்தி (வயது 39), ஏ.எம்.ராகியத்தும்மா (வயது 51) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பெண் சந்தேக நபர்களும் சந்தேக நபரும் கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.