கால்பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளார் போர்த்துக்கல் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரொனால்டோ அறியப்படுகிறார். சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையை அவர் படைத்துள்ளார்.
மொத்தம் 197 சர்வதேச போட்டிகளில் அவர் இதுவரை விளையாடி உள்ளார்.
நடப்பு யூரோ கோப்பை தகுதி சுற்றில் லீக்கின்ஸ்டைன் அணிக்கு எதிராக ரொனால்டோ களம் கண்டார். அது அவரது 197வது சர்வதேச போட்டியாக அமைந்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 2 கோல்களை அவர் பதிவு செய்திருந்தார்.
இதன் மூலம் குவைத் வீரர் அல்-முதாவாவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். வியாழக்கிழமை அன்று இந்த சாதனையை ரொனால்டோ படைத்திருந்தார்.
கடந்த 2003 முதல் அவர் சர்வதேச போட்டிகளில் போர்த்துக்கல் அணிக்காக விளையாடி வருகிறார்.
சர்வதேச போட்டிகளில் மொத்தம் 120 கோல்களை ரொனால்டோ பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அதிக கோல்கள் பதிவு செய்தி வீரர்களின் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது அணியில் அவருக்கான இடம் சந்தேகமானதாக இருந்தது. இந்த சூழலில் யூரோ தொடரில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.