உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்தலாமா அல்லது ஒத்திவைப்பதா அல்லது மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதா என்பதை இரண்டு நாட்களில் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.
இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தினர். பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசமும் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தினார்.
பொதுஜன பெரமுனவினால் கொண்டு வரப்பட்ட ஜனாதிபதி, பொதுஜன பெரமுனவின் அரசாங்கம், பொதுஜன பெரமுன பெரும்பான்மையாக உள்ள அமைச்சரவை ஒரு தீர்மானத்தையும், கட்சி பிறிதொரு தீர்மானத்தையும் எடுக்கிறதா என ஏனைய கட்சிகள் கேள்வியெழுப்பின.
பெரமுனவின் அமைச்சர்கள் உறுதியான முடிவெடுத்தாலே தேர்தலை நடத்தலாம் என சுட்டிக்காட்டினர். எம்.ஏ.சுமந்திரனும் இதனை சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த சாகர காரியவசம், தமிழ் தேசிய கூட்டமைப்பை போலவே பொதுஜன பெரமுனவில் பல கட்சிகள் உள்ளதாகவும், பெரமுன தனியாக தீர்மானமெடுப்பதில்லையென்றும் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நடத்தக் கோரும் போது, ரணில் விக்ரமசிங்க என்ற ஒருவர்தான் தேர்தலுக்கு எதிராக உள்ளார், எனவே சட்டநடவடிக்கைக்கு செல்ல வேண்டுமென கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சட்டத்தரணிகள் சிலர், தேர்தல் ஆணைக்குழுவை நீதிமன்றத்திற்கு செல்லுமாறும், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இலவசமாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அங்கு கருத்து கூறிய எம்.ஏ.சுமந்திரன், தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டார். நிறைவேற்றதிகாரமிக்க ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாதே தவிர, நிதியமைச்சராக ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்கு தொடரலாமென சுட்டிக்காட்டினார்.
உடனடியாக உள்ளூராட்சிசபை தேர்தலை நடத்துமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கையொப்பமிட்டு கடிதம் தருவதாகவும், தேர்தல் ஆணைக்குழுவை சட்ட நடவடிக்கைக்கு செல்லுமாறும் கட்சிகள் வலியுறுத்தின.
தேர்தலை தடுக்க அரச தரப்பால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளித்தார். ரணில் ஆதரவு ஊடகங்கள் மூலம் போலிப்பிரச்சாரம் செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், அந்த ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதை போல தேர்தல் ஆணைக்குழுவுக்குள் பிளவு இல்லையென்றார். பி.எஸ்.எம்.சாள்ஸ் தவிர்த்த மிகுதியாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர்.
சாள்ஸ் பதவிவிலகுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவரோ, ஜனாதிபதியோ அறிவிக்கவில்லை, தற்போதுவரை அவர் பதவியில் தொடர்வதாகவே கருதப்படுகிறது என்றார்.
கடந்த தேர்தல் கொடுப்பனவு பொலிஸ் திணைக்களத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லையென்பது போலிச்செய்தியென தெரிவித்தார்.
வழக்கமாக தேர்தல்களின் பின்னரே அரச அச்சகத்திற்கு பணம் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், இம்முறை வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதற்கு முன்னரே பணம் கோருவது தேர்தலை தடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு அங்கமென்பதை சுட்டிக்காட்டினார்.
அத்துடன், விசேட ஆணையாளர் ஒருவரை நியமித்து உள்ளூராட்சிசபைகளை பராமரிக்க முயற்சிக்கப்படுவதாக வெளியான தகவல்களை சுட்டிக்காட்டிய தேர்தல் ஆணையாளர், அது சட்டமீறல் என்பதுடன், பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும் என்றார்.
அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டறிந்த தேர்தல்கள் ஆணைக்குழு, அடுத்த 2 நாட்களிற்குள் உறுதியான முடிவை அறிவிப்பதாக தெரிவித்தது.