வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் மணல் ஏற்றி வந்த லொறி மோதி தந்தை உயிரிழந்துள்ளதுடன், மகள் படுகாயமடைந்தார்.
இன்று (21) மதியம் இந்த விபத்து நிகழ்ந்தது.
மருதங்கேணியிலிருந்து குடத்தனை நோக்கி பயணித்த மணல் ஏற்றிய லொறியும், குடத்தனை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தையையும், மகளையும் மோதியது.
லொறியின் முன்பாக துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் வீதி ஒழுங்கை பின்பற்றாமல் திடீரென வலது பக்கம் திரும்பினார். லொறி சாரதி சடுதியாக பிரேக்கை அழுத்திய போதும், பிரேக் செயலிழந்திருந்தது. இதனால் முதியவரை மோதாமல் தவிர்ப்பதற்காக லொறிரய சடுதியாக வலது பக்கமாக வேகமாக திருப்பியுள்ளார்.
வீதியின் மறுபக்கம் லொறி சடுதியாக சென்ற போது, எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களையும் மோதித்தள்ளியது.
இதில் சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்தார். படுகாயமடைந்த மகள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வத்திராயன் தெற்கு பகுதியை சேர்ந்த 44 வயதான சின்னராசா கணேசலிங்கம் என்பவரே உயிரிழந்தார். 21 வயதான மகள் படுகாயமடைந்தார்.
உயிரிழந்தவருக்கு 5 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளனர்.