வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைய இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 26/2 என தடுமாறி வருகிறது. நியூசிலாந்தை விட 554 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
இன்றைய நாள் கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸுக்கு சொந்தமானது என்றால் மிகையல்ல. அவர்கள் ஒரே இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து துடுப்பாட்ட ஜோடி என்ற சாதனையை படைத்தனர். இருவரும் சேர்ந்த இலங்கை வீரர்களை மைதானம் முழுவதும் ஓடவிட்டு வெறுப்பேற்றினர். ஓயாத ஓட்டம். ஓயாத அலைச்சல். இந்த ஜோடியை பிரிக்க இலங்கையிடம் எந்த வாய்ப்புமிருக்கவில்லை. அடித்து களைக்கட்டும் என, ஓடிக்களைத்தனர்.
இந்த ஜோடி காலை செசனில் 34 ஓவர்கள்ளில் 4.38 என்ற ரன் ரேட்டில் 149 ரன்கள் எடுத்தனர். மதிய உணவிற்குப் பிந்தைய 26 ஓவர்களில் 5.34 என்ற ரன் ரேட்டில் 139 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 580 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேன் வில்லியம்சன் 215 ரன்களும், ஹென்ரி நிக்கோலஸ் ஆட்டமிழக்காமல் 200 ரன்களும் எடுத்தனர். இருவரும் 363 ரன்களை இணைப்பாட்டமாக பெற்றனர். 3வது விக்கெட்டிற்கான நியூசிலாந்தின் சிறந்த 2வது இணைப்பாட்டம் இது.
இரண்டாம் நாளில் கடைசி 17 ஓவர்களும் இலங்கை ஆடி, 26/2 என தடுமாறி வருகிறது.
ஓஷத பெர்னாண்டோ 6, குஷல் மெண்டிஸ் 0 என நடையை கட்டினர். கப்டன் திமுத் கருணாரத்ன 16 ரன்களுடனும், நைட் வோட்ச்மன் பிரபாத் ஜயசூரிய 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கையின் வேகப்பந்து வீச்சு மிக மோசமாக இருந்தது. நேற்றுடன் ஒப்பிடுகையில் மைதானத்தில் கடுமையான காற்றும் வீசவில்லை. ஆனால் பந்துவீச்சு மோசமாக இருந்தது. குறிப்பாக லஹிரு குமார 6.56 என்ற ரன் ரேட்டில் 164 ரன்களை வாரி வழங்கினார். அவரால் லெந்தை கண்டறிய முடியவில்லை. சகட்டுமேனிக்கு வீசி, வாங்கிக் கட்டினார்.
ஆனால், நியூசிலாந்தின் பந்துவீச்சில் துல்லியம் இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் அணியில் இடமில்லாமல் இருந்த டக் பிரேஸ்வெல், மட் ஹென்ரி தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர். அவர்களின் வேகப்பந்தில் நல்ல ஸ்விங் இருந்தது.
இதே நிலைமை நாளையும் நீடித்தால்- ஏதாவது ஆச்சரியங்கள் நிகழா விட்டால்- இலங்கையின் கதி அதோ கதிதான்.