நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தனது முகநூலில் மணல் அகழ்வு குறித்து நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குக்காக சட்டத்தரணிகளுக்கு பிரதேச சபை நிதியிலிருந்து பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்த போதும் சபை நிதியில் இருந்து சட்டத்தரணிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை என சபை அமர்வில் கண்டறியப்பட்டுள்ளதாக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நானாட்டான் பிரதேச சபையின் 62 வது மாதாந்த பொதுக்கூட்டம் சபையின் இறுதிக் கூட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை (17.07.2023) நடைபெற்றது.
கடந்த காலங்களில் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக சகல உறுப்பினர்களும் கருத்துக்களை முன் வைத்தனர்.
பிரதேச சபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பிரதேச சபை மக்கள் பிரதிநிதி களோடு இணைந்து எவ்வித நிதியும் திரும்பி போகாத முறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நானாட்டதன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தனது முகநூலில் நீதிமன்றத்தில் நடைபெற்ற மணல் அகழ்வு குறித்த வழக்குக்காக சட்டத்தர ணிகளுக்கு பிரதேச சபை நிதியிலிருந்து பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இதன் போது பிரதேச சபையின் நிதிக்குழு உறுப்பினர்களும் சமூகம் அளித்திருந்தனர்.
மாதாந்த கணக்கறிக்கை சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த படியால் அவர்கள் எவ்விதமான எந்தக் கொடுப்பனவும் வழங்கப்படவில்லை (மணல் வழக்கு) என ஏகோபித்த தீர்மானம் நிறைவேற்றும் படி கோரினர்.
அதே போன்று 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இவ் உறுப்பினர் தலைமையில் தவிசாளர்,உப தவிசாளர், பிரதேச சபை செயலாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதே சட்டத்தரணி குழுக்கள் எவ்வித கெடுப்பனவும் இன்றி வாதிட்டு வழக்கை எங்களுக்கு சாதகமாக வெற்றியீட்டி தந்தனர்.
குறித்த பிரதேச சபை உறுப்பினரின் உண்மையான முகத்தை மக்களாகிய நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.