பிக் பாக்கெட் அடிப்பது போல அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பெற முயற்சி நடப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சிறுபிள்ளைத்தனமானது. ஒரு தேர்தல் என்பது வாக்காளர் பட்டியல் தொடங்கி பல்வேறு முறைகளில் தான் நடைபெற வேண்டும். அதிமுக மிகப்பெரிய மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் தேர்தல் சட்டவிதிகளின் படி தான் நடைபெற வேண்டும். இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் உள்ளது.
விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். இதை நாங்கள் கண்டிக்கிறோம். சட்ட ரீதியாக இதை எதிர்கொள்வோம். ஆனால், இது வேதனையாக உள்ளது. மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார்” என அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெறும். தேர்தல் நடத்துவதற்கு முன்பாக உறுப்பினர் படிவம் அளிக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். இதை எல்லாம் முடித்த பிறகுதான் அதிமுகவின் உட்சபட்ச பதவிக்கு தேர்தல் நடைபெற வேண்டும். இவை எதுவும் செய்யாமல் பிக் பாக்கெட் அடிப்பது போன்று பதவியை பெற முயற்சிக்கிறார்கள். எதுவுமே முறைப்படி இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.
ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான். அதிமுகவை மீட்கும் பணியை வேகமாக செய்வோம். சர்வாதிகாரமாக தேர்தல் அறிவிப்பை அறிவித்துள்ளார்கள். தொண்டர்கள் கலங்க வேண்டாம்” என அவர் கூறினார்.