29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சோழர்கள் கட்டிய கம்போடியாவின் கற்கோயில்!

அங்கோர் வாட் என்பது கெமர் மொழிச்சொல். அங்கோர் என்றால் நகரம் வாட் என்றால் கோயில் என்றும் பொருள். அதாவது கோயில் நகரம்.

சூரியவர்மன் என்னும் மன்னரால் சூரியனுக்கு கட்டப்பட்டிருக்கும் பிரமாண்டமான கற்கோவில் தான் இது. விஷ்ணுவைக் கொண்டாடும் ஒரு கோவிலாகவும் இருந்ததாகவும் 12 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகு இது பௌத்த கோவிலாக மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது கோவிலின் மையப்பகுதியில் கோபுரத்தின் கீழ் இருப்பது புத்தரின் சிலை தான்.

அங்கோர் வாட் பற்றி ஒரு நாளில் எழுதி விவரிக்க முடியாத அளவுக்கு நீண்ட பிரம்மாண்டமான கதைகளை கொண்டது. இதற்கு ஒப்பான வேறு எந்த கட்டிடமும் உலகில் இல்லை. பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சுவையும் யோர்தான் நாட்டில் உள்ள பெற்ராவையும் எகிஃதில் உள்ள பிரமிட்டுக்களையும் பார்த்த எனக்கு அங்கு ஏற்படாத மலைப்பு இங்கு ஏற்பட்டது. இதன் கோபுரங்கள் மற்றும் அலங்காரங்கள் அனைத்தும் மனித மேதைகள் கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் உள்வாங்கியிருக்கிறது.

இக் கோவிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோவில் முழுத்தோற்றம் பெற்றது. 1177-ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜெயவர்மன் சிறிது தூரம் வடக்கே பக்கமாக புதிய தலைநகரத்தையும்,பல கோவிலையும் நிறுவினார். 13-ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோவிலில் இருந்து பௌத்த மத பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே புத்தர் சிலைகள் இருந்தாலும் எங்கும் வழிபாடு நடைபெறவில்லை .

முற்றிலும் கற்களால் கட்டப்பட்டு சோழர் காலக் கோவிலைப் போல, ஆனால் மேற்கு பக்கமாக பார்த்த வண்ணம் இருக்கிறது. கோவிலைச் சுற்றி 5 கிமீ சுற்றளவுள்ள அகழி உள்ளது. இதன் ஆழம் 13 அடி. பெரிய கோவிலின் அடித்தளத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மிகவும் உயரமாகவோ, குறைந்தோ போகாமல் பாதுகாக்கவும் இது உதவுகிறது. 53 மில்லியன் கன அடி மணலைத் தோண்டி எடுத்து, பல ஆயிரம் மக்கள் உழைப்பினால் இது தோண்டப்பட்டிருக்கிறது.

அகழிக்கு முன்னால் பாதுகாப்பிற்காக சிங்கங்களின் சிலைகள் உள்ளன. ஐந்து தலைநாகமும் அதன் நீளமான உடலும் கைப்பிடிச் சுவராக அமைக்கப்பட்டுள்ளன. அகழியைத் தாண்டி, உள்ளே சற்று தூரம் சென்றபின் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆங்காங்கே பசுமையான புல் தரைகள். மிக விரைவில் வெயில் தாங்க முடியாமல் வறண்டு போகிறது. எப்போதும் தண்ணீர் தெளித்த படியே உள்ளார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்க்கும் இடமெல்லாம் தலை இல்லாத புத்தரின் எழில் மிகு வடிவச் சிலைகள். அமர்ந்த நிலையில், நின்ற நிலையில், தியான வடிவில்.

கோவிலுக்கு நுழைவதற்கு முன்பு தண்ணீரில் மிதக்கும் மிகப் பெரிய பாலம் ஒன்றை கடந்து சென்று தான் கோவிலுக்குள் நுழைய முடியும்.இந்த பாலத்தில் நடப்பது ஒரு சுவாரசியமான அனுபவம். அந்த அகழியைச் சுற்றி தான் கோவில் உள்ளது.
இந்த அற்புதமான கட்டிடக்கலை அதிசயத்தை வாழ்வில் பார்த்து விட்ட திருப்தியில் வெளியே வந்து ஒரு பனைமர நிழலில் இருந்த போது ஒரு இனிய இசை மனதை வருடிச் சென்றது.

கண்ணிவெடியில் கால்களை இழந்தவர்கள் ஒரு அமைப்பாக கம்போடியா முழுவதும் இசைக்கிறார்கள். ஆறு அல்லது ஏழு பேர் அடங்கிய குழு. கால் அல்லது கையை இழந்தவர்கள். சிலர் பார்வை இழந்தவர்கள். அனைவரும் ஐம்பது அறுபது வயதுகளில் வாழ்பவர்கள்.

இந்த மனதை வருடிச் செல்லும் இனிய இசைக் கருவியின் பெயர் கிம் .கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் பண்பாட்டில் கலந்துவிட்ட ஒரு இசைக்கருவிதான் கிம். மூங்கில் குச்சிகளால் நரம்புக்ளை மீட்டி இசைக்கப்படுவது. பண்டைய பெர்ஷியாவில் இந்த இசைக்கருவி பயன்பாட்டில் இருந்ததாகவும் பின்னர் 14ம் நூற்றாண்டு வாக்கில் சீனாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதென்றும் பின்னர் சீனா வழியாக கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அறிமுகமாகியது.

-இந்த பதிவு சுரேஷ் துரை கணபதிப்பிள்ளை என்பவர் பேஸ்புக்கில் இட்ட பதிவு. பதிவை பார்க்க இங்கு அழுத்தவும்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

மூளைச்சாவடைந்த மாணவியின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்ட 7 பேர் உயிர்பிழைத்தனர்!

Pagetamil

தென்னகோனுக்கு எதிரான மனு செலவுகளுடன் நிராகரிப்பு!

Pagetamil

வாகன விபத்தில் சாரதி பலி

Pagetamil

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறைக்கு புதிய தலைவர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!