இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 16 கிலோ கேரள கஞ்சாவை ஏற்றிச் செல்வதற்கு மோட்டார் சைக்கிளை வழங்கிய குற்றச்சாட்டில் சிலாவத்துறை பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கரவெட்டியை வசிப்பிடமாகக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள், ஏழாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரை 3 நாள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த கொடிகாமம் பொலிசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி 16 கிலோ கஞ்சா பொலிசார் கைப்பற்றினர். வீடொன்றிற்கு அருகில் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கஞ்சாவை கடத்திய மோட்டார் சைக்கிளை கைவிட்டு, சந்தேகநபர்கள் தலைமறைவாகினர்.
இது, சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் துணையுடன் நீண்டகாலமாக இயங்கி வந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பாக இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த மோட்டார் சைக்கிள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடையது. அவர் மன்னார், சிவாலத்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகிறார்.
தேடப்பட்டு வந்த பொதுமகனான சந்தேகநபர் முதலில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். தனது வீட்டுக்கு அருகிலுள்ள பற்றையிலிருந்து கஞ்சாவை எடுத்ததாக அவர் கூறிய போதும், சந்தேகத்திற்கிடமான பெருந்தொகை பணப்பரிமாற்றங்களை அவர் மேற்கொண்டதற்கான ஆதாரங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில், மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் கான்ஸ்டபிள், யாழ்ப்பாணம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஏழாலையில் வைத்து கைது செய்யப்பட்டு, கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரை 3 நாள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கைதான பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரிடமும் பொலிசார் விசாரணை நடத்த எதிர்பார்த்துள்ளனர். எனினும், கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் பின்னர் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்கு சமூகமளிக்கவில்லையென குறிப்பிடப்படுகிறது.