கொழும்பு சிங்கள விளையாட்டுக் கழகத்தின் (SSC) மைதானத்திற்குள் விழுந்த கிரெடிட் கார்ட்டைப் பயன்படுத்தி ரூ.20,000 பெறுமதியான ஃபேர்னஸ் முகப்பூச்சு க்ரீம் வாங்கிய, அதே விளையாட்டுக்கழகத்தின் ஊழியரை மார்ச் 20 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (15) உத்தரவிட்டுள்ளார்.
கைதான விளையாட்டுக்கழக ஊழியரை கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.
கைதான இளைஞன் ஜா-எல பகுதியை சேர்ந்தவர்.
தனது மனைவி வெள்ளை நிறமானவர் என்றும், தான் கறுப்பாக இருப்பதை அடிக்கடி மனைவி கிண்டலடிப்பதாகவும், மனைவிக்கு ஈடாக சிவப்பழகை பெற, ஃபேர்னஸ் க்ரீமை வாங்க விரும்பியிருந்ததாகவும், ஆனால் பணம் கிடைக்காமல் காத்திருந்ததாகவும், கிரெடிட் கார்டை தரையில் கண்டவுடன், க்ரீம் வாங்க வேண்டுமென்பது நினைவுக்கு வந்ததால், அதை எடுத்ததாகவும் கைதான இளைஞன் தெரிவித்துள்ளார்.
இந்த கிரெடிட் கார்ட் பட்டயக் கணக்காளர் ரணில் விஜேசிங்காவுக்கு சொந்தமானது. கடந்த பெப்ரவரி 26ம் திகதி முதல் காணாமல் போனதாகவும், அது எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை என்றும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர், கிருலப்பனவில் உள்ள கடையொன்றில் இருந்து ஃபேர்னஸ் க்ரீம் கொள்வனவு செய்யப்பட்டதற்கான விபரம் அவரது கையடக்கத் தொலைபேசிக்கு வந்துள்ளது.
இதையடுத்து, கிரெடிட் கார்ட் உரிமையாளர் கறுவாத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்படி கடையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர், சந்தேக நபர் SSC இல் பணிபுரிபவர் என முறைப்பாட்டாளர் அடையாளம் கண்டுள்ளார். அதன்படி, ஜா-எல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விளையாட்டுக்கழக மைதானத்தில் கிரெடிட் கார்ட் விழுந்திருந்த போது எடுத்ததாக இளைஞர் தெரிவித்தார்.