மடகாஸ்கரில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் விமானத்தில் ஏறாமல் வன்முறைச் சூழலை ஏற்படுத்த முயற்சித்த தகவல் வெளியாகியுள்ளது.
மடகாஸ்கர் விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டு, அவர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வர விடாமல் தடுக்க கடுமையாக முயற்சித்துள்ளனர்.
அந்தச் சம்பவத்தின் மூலம் மோதலை உருவாக்கி மடகாஸ்கரில் இருக்க முயன்றனர். இருப்பினும், அதிகாரிகள் தந்திரமாக அவர்களைக் கட்டுப்படுத்தி விமானத்தில் ஏறச் செய்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை ஆகியவற்றின் நான்கு அதிகாரிகள் மற்றும் மடகாஸ்கர் காவல்துறையின் இரண்டு அதிகாரிகள் அவர்களை மடகாஸ்கரில் இருந்து கென்யாவிற்கும் கென்யாவிலிருந்து மும்பைக்கும் இறுதியாக பாதுகாப்பாக இலங்கைக்கும் கொண்டு வந்தனர்.
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து மற்றும் பலர் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்ட போது போதைப்பொருள் வியாபாரிகளை மீட்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் குழுவும் மடகாஸ்கருக்கு சென்றிருந்தனர். ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரும் இரண்டு பெண் சட்டத்தரணிகளும் அந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில், மடகாஸ்கரின் பாதுகாப்புப் படையினரின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்க பொலிஸ் அதிகாரிகளுக்கு 600,000 அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
குடு சலிந்து மடகாஸ்கரில் நீண்ட நாட்களாக வசித்து வருகிறார். தொழிலதிபராக நாட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மடகாஸ்கரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
குடு சலிந்து ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக ஹரக் கட்டா மற்றும் பலர் துபாயில் இருந்து ஜெட் விமானம் மூலம் வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மடகாஸ்கருக்கு வந்தபோது, குடு சலிந்து மடகாஸ்கரில் இருந்தார். ஹரக் கட்டா தனது மனைவி மற்றும் மூன்று பேருடன் மடகாஸ்கருக்கு வந்திருந்தார்.
அவர்கள் டுபாய் திரும்பவிருந்தபோது மடகாஸ்கரின் பாதுகாப்புப் படையினரால் பிடிபட்டனர். குடு சலிந்தும் டுபாய் செல்லும் அணியிலும் இருந்துள்ளார்.
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழு மார்ச் 1 அன்று மடகாஸ்கரில் உள்ள இவாடோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் மடகாஸ்கரின் பாதுகாப்புப் படையினருக்கு பணம் கொடுத்து தங்களை விடுவிக்க முயன்றனர். கைது செய்யப்பட்டு 3-4 நாட்கள் கழிவதற்கு முன்னரே இலங்கையில் இருந்து சட்டத்தரணிகள் குழு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை இந்த நாட்டிடம் ஒப்படைக்காமல் மடகாஸ்கரில் தங்க வைக்க அவர்கள் தங்களால் இயன்றவரை முயன்றனர்.
இலங்கையில் இருந்து நான்கு பேர் அடங்கிய பொலிஸ் அதிகாரிகள் குழு மார்ச் 11 மாலை ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்துவை அழைத்து வருவதற்காக மடகாஸ்கருக்குச் சென்றது.
அவர்கள் இலங்கையிலிருந்து மும்பை சென்று அங்கிருந்து எதியோப்பியாவுக்குச் சென்று மார்ச் 12ஆம் திகதி மடகாஸ்கரை அடைந்தனர்.
கடந்த 13ஆம் திகதி ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை காவலில் எடுத்துக்கொண்டனர்.
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரையும் விமானத்தில் ஏற்றிச் செல்ல மடகாஸ்கர் காவல்துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அண்டனானரிவோ விமான நிலையத்தின் ஊடாக அவர்களை அழைத்து வர முயன்ற போது, அவர்கள் விமானத்தில் ஏறாமல் கலவரமாக நடந்து கொண்டதால், பயணம் தாமதப்பட்டுள்ளது.
எனினும், அவர்களை கட்டுப்படுத்திய பின்னர், அவர்கள் மடகாஸ்கரில் இருந்து ஒரு விமானத்தில் கென்யாவின் நைரோபியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
கென்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இந்தியாவில் உள்ள மும்பை விமான நிலையத்திற்கு வர திட்டமிடப்பட்டது. விமானத்தில் இருவரையும் ஏற்றிய போது, ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை விமானத்தில் அனுமதிக்க முடியாது என்று விமான நிறுவனம் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தது. பாதுகாப்பு அறிக்கை இன்னும் வரவில்லை என்று கூறினர்.
அதன்படி, அவர்கள் அடுத்த விமானம் புறப்படும் வரை அங்கு தங்க வேண்டியிருந்தது. இதையடுத்து, கென்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு விசேட பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டனர். சுமார் எட்டு மணித்தியாலங்களாக விமான நிலையத்தில் தங்கியிருந்துள்ளனர்.
விமானத்தில் இருக்கும் போது கைவிலங்கு கூட பயன்படுத்த அனுமதிக்கப்படாது. அடுத்த விமானத்தில் ஹரக் கட்டா மற்றும் அழைத்து வரப்பட்டனர்.
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்துவுடன் இந்தக் குழுவினர் மும்பை வந்தடைந்தபோது, அவர்கள் மும்பையிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
எனவே, இந்தக் குழுவினர், நேற்று முன்தினம் (14) அதிகாலை இலங்கை வரவிருந்த போதும், நேற்று (15) காலையே இலங்கையை வந்தடைந்தனர். நேற்று வந்த விமானமும் தாமதமாகவே வந்து சேர்ந்தது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சுமார் இரண்டு மணி நேரம் தாமதம் ஆனது. மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது பயணி ஒருவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியில் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை இலங்கைக்குக் கொண்டு வந்த யுஎல்-142 இலக்க விமானத்திற்கு அருகில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று வந்து அவர்களைக் காவலில் எடுத்துள்ளது.
விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்களம் விமானத்திற்கு அருகாமையில் தேவையான பணிகளை மேற்கொண்டதுடன் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தின் ஊடாக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.
இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்திலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், அவர்களை கொழும்புக்கு அழைத்துச் செல்லும் போது வீதியின் இருபுறங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.