கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில், கடைசி பந்தில் நியூசிலாந்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை, இந்தியா எதிர்கொள்ளும்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தது. அவுஸ்திரேலியாவுடன் மோதும் அணி எதுவென்பதை தீர்மானிக்கும் இரண்டு போட்டிகள் தற்போது நடந்தன.
இந்தியாவின் அகமதாபாத்தில் இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில், இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதின. இரண்டு போட்டிகளின் முடிவின் அடிப்படையிலேயே, இறுதிப் போட்டிக்கான அணி தெரிவாகவிருந்தது.
இந்தியா தற்போது ஆடி வரும் டெஸ்ட் போட்டியில் வெற்றியடையாவிட்டால், இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். இலங்கை அணி ஒரு டெஸ்டில் தோல்வியடைந்தாலும், இந்தியாவின் இறுதிப் போட்டிக்கு கனவிற்கு எந்த பாதிப்பும் இல்லையென்ற நிலைமையிருந்தது.
கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த டெஸ்ட்டில் நியூசிலாந்து கடைசிப்பந்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றியீட்டியது. இதனால் இலங்கையின் கனவு தகர்ந்தது. இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 121 ரன்களும், டேரில் மிட்செல் 86 பந்துகளில் 81 ரன்களும் எடுத்து நியூசிலாந்தை வெற்றி பெற வைத்தனர்.
இப்போது, கிறைஸ்ட்சர்ச்சில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றாலும், 52.78 புள்ளிகள் மட்டுமே உயரும். அகமதாபாத் டெஸ்டில் இந்தியா தோற்றாலும் அது இந்தியாவின் 56.94ஐ விட குறைவாக இருக்கும். இந்தியா போட்டியை சமன் செய்யுமென்றே தெரிகிறது. சமன் செய்தால் இந்தியா 58.80 என்ற பாதுகாப்பான புள்ளிகளுடன் இருப்பார்கள்.
இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. அகமதாபாத்தில் தோற்றாலும், 64.91 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கும்.
உலக சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் நடைபெறுகிறது.