யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் பதவியிழந்ததை தொடர்ந்து, வரும் 10ஆம் திகதி புதிய முதல்வர் தெரிவு நடக்கவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இம்மானுவேல் ஆனோல்ட், இந்த மாநகரசபையின் பதவிக்காலத்தில் இரண்டு முறை முதல்வராக தெரிவாகி பதவியிழந்து விட்டார். இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு உள்ளூராட்சிசசபையின் பதவிக்காலத்தில் அதிக தோல்வியடைந்த வரவு செலவு திட்டங்களை சமர்ப்பித்த தலைவர் என்ற சாதனைக்கும் அவர் சொந்தக்காரராக இருக்கக்கூடும். 8 முறை வரவு செலவு திட்டங்கள் சமர்ப்பித்து, 7 முறை தோல்வியடைந்துள்ளார்.
அடுத்த முதல்வர் தெரிவில் அவர் போட்டியாளராக களமிறக்கப்பட்டால் தமிழ் அரசு கட்சி வெற்றியடையாது என்பது உறுதியாகி விட்டது. புதிய முதல்வர் ஒரு வாரம் தான் பதவியிலிருப்பார் என்ற போதும், புதிய முதல்வர் வேட்பாளர் ஒருவரை தமிழ் அரசு கட்சிம் தெரிவு செய்ய வேண்டியிருக்கும்.
அனேகமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ.சிறில் வேட்பாளராகினால் மட்டுமே, ஏனைய தரப்பில் சிலரது ஆதரவையாவது தமிழ் அரசு கட்சி பெற முடியும்.
சரி, எதிர்கால முதல்வர் தெரிவை இத்துடன் நிறுத்தி விட்டு, கடந்த முதல்வர் தெரிவின் பின்னணியில் நடந்த சுவாரஸ்ய சம்பவமொன்றை குறிப்பிடுகிறோம்.
ஆனோல்ட்டின் வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாக தோல்வியடைந்ததும், சமூக ஊடகங்களில் தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்களின் கோபம் எதிரொலித்தது. பொதுவாகவே சமூக ஊடகங்கள் என்றாலே பலருக்கு தர்க்க நியாயங்கள் தேவையில்லையென்பது நினைப்பு. அதிலும், அரசியல் கட்சி மோதல் என்றால் அனேகமானவர்கள் மூளைக்கு வேலை கொடுக்காமலே சமூக ஊடகங்களில் பதிவிடுவார்கள்.
அப்படியான ஒரு சம்பவம்தான், தமிழ் அரசு கட்சி தொண்டர்கள் பலரது கோபம். முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தரப்பினர் ஈ.பி.டி.பியுடன் இணைந்து வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து விட்டதாக கற்பனையாக கோபப்பட்டனர்.
மணிவண்ணன் வரவு செலவு திட்டத்தை ஆதரித்து, ஆனோல்ட்டின் பதவியை காப்பாற்ற வில்லையென்ற கோபத்தை தீர்த்துக் கொள்ள, மணிவண்ணனுக்கும், ஈ.பி.டி.பிக்கும் தொடர்பை ஏற்படுத்தினர் தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்கள்.
ஆனால், உண்மை அதுவல்ல.ஆனோல்ட் மட்டுமல்ல, மண்வண்ணன் தரப்பையும் முதல்வர் பதவிக்கு வர ஈ.பி.டி.பி இப்போதைக்கு அனுமதிக்காது. ஆதரவளிக்காது. உள்ளூராட்சி தேர்தல் நெருங்கும் சமயத்தில் எந்தக்கட்சியும் இதே முடிவைத்தான் எடுக்கும்.
ஆனால், ஈ.பி.டி.பியின் ஆதரவை தமிழ் அரசு கட்சி கோரி, அது கிடைக்காமல் போனது என்பதுதான் உண்மை. மணிவண்ணனை ஈ.பி.டி.பியுடன் இணைத்து திட்டும் தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்களுக்கு, இந்த உண்மை தெரிந்தால் மாரடைப்பு ஏற்பட்டு விடக் கூடும்.
யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற ஈ.பி.டி.பியின் உதவியை தமிழ் அரசு கட்சி நாடியதும், அது தொடர்பில் ஈ.பி.டி.பி முன்வைத்த நிபந்தனை பற்றிய பின்னணி விபரங்களை இந்த பகுதியில் குறப்பிடுகிறோம்.
இ.ஆனோல்ட் தனது பதவியை தக்க வைக்க எல்லளவு இறங்கிச் செல்ல முடியுமோ, அவ்வளவிற்கு இறங்கிச் சென்றார். மாநகரசபையிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வீடுகளிற்கும் சென்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பை ஆனோல்ட் தனிப்பட்ட ரீதியில் கோரினார். அது வெற்றியடையவில்லை. பின்னர், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசிய கூட்டமைப்பி்ன் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசினார். அதுவும் வெற்றியளிக்கவில்லை.
இதையடுத்து, இலங்கை தமிழ் அரசு கட்சி ஒரு விபரீத முடிவெடுத்தது. அது, ஈ.பி.டி.பியின் ஒத்துழைப்பை கோருவதென்ற முடிவு.
ஈ.பி.டி.பியின் செயலானர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொலைபேசிக்கு, ஆனோல்ட் அழைப்பேற்படுத்தினார். பதல் இல்லை. பலமுறை அழைத்தார். டக்ளஸ் பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, டக்ளஸூடன் நெருக்கமாக உள்ள பலவின் தொலைபேசிகளிற்கு ஆனோல்ட்டும், ஆதரவாளர்களும் அழைப்பேற்படுத்தினர். ஆனாலும், டக்ளஸை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, கட்சித்தலைவர் மாவையிடம் இந்த விவகாரத்தை தெரிவித்த ஆனோல்ட், அவரையும் ஈ.பி.டி.பியுடன் பேசுமாறு கேட்டுக் கொண்டார்.
மாவை சேனாதிராசா, ஈ.பி.டி.பியின் முன்னாள் மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு மாவை சேனாதிராசா கேட்டுக் கொண்டார்.
இது பற்றி கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸூடன் பேசிவிட்டு சொல்வதாக தவராசா குறிப்பிட்டார்.
அது பற்றி அமைச்சர் டக்ளஸிழடம் தவராசா குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடத்தில் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பேச வேண்டும்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர், யாழ் மாநகரசபையில் தமிழ் அரசு கட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஈ.பி.டி.பியின் துணை யை கோரியிருந்தது.
எம்.ஏ.சுமந்திரனும், மாவை சேனாதிராசாவும் டக்ளஸ் தேவானந்தாவை தொலைபேசியில் அழைத்து, ஆதரவு கோரியிிருந்தனர். ஈ.பி.டி.பியின் ஆதரவு தமிழ் அரசு கட்சிக்கு கிடைத்தது.
ஆனால், அதை பொதுவெளியில் சொல்ல தமிழ் அரசு கட்சி விரும்பவில்லை.
கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களை போலவே, ஈ.பி.டி.பியின் உறவை பகிரங்கமாக சொல்ல தமிழ் அரசு கட்சி தயங்கியது. ஆனால் அந்தக்கள்ளக்காதல் உறவை அனுபவித்துக் கொண்டுமிருந்தது.
அத்துடன், ஈ.பி.டி.பியிடம் நாம் ஆதரவு கோரவில்லையென மாவையும், சுமந்திரனும் கூறினர். அது அவர்கள் மனமறிந்து சொன்ன பொய்யொன்று.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா, கறாரான நிபந்தனையொன்றை விதித்தார்.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதெனில், தமிழ் அரசு கட்சி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே, அதைப்பற்றி பரிசீலிக்கலாமென அவர் கூறிவிட்டார்.
தமிழ் அரசு கட்சியின் தரப்பில் கட்சித் தலைவர் மாவையும், பேச்சாளர் சுமந்திரனும் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்க வேண்டுனெ நிபந்தனை விதிக்கப்பட்டது.
கட்சித்தலவராக மாவை இருந்தாலும், நடைமுறைத் தலைவராக சுமந்திரன் இருப்பதால், குழப்பங்கள் ஏற்படாமலிருக்க இந்த ஏற்பாடு. தற்போதைய மாநகரசபையின் பதவிக்காலத்தின் தொடக்கத்தில் மாவை, சுமந்திரன் அணிகளின் மோதலால்தான் தமிழ் அரசு கட்சி, மாநகரசபை ஆட்சியை இழந்தது.
அப்போது ஆனோல்ட்டின் பதவியிழப்பிற்கு காரணமாக இருந்தவர் ஒரு தமிழ் அரசு கட்சி உறுப்பினர். அவர் வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிக்கவில்லை. அவர் சுமந்திரன் அணியை சேர்ந்தவர். அவர் வாக்களிக்காமல் மாநகர ஆட்சியை கவிழ்த்த அன்று இரவு, அவரது வீட்டில் சுமந்திரன் வெகுநேரம் தங்கியிருந்தார். இதெல்லாம் அப்போது நடந்த சம்பவங்கள். பலருக்கு நினைவிருக்கும்.
தமிழ் அரசு கட்சிக்குள் உள்ள இரண்டு அணிகளுமே தனித்தனியாக கடிதம் வழங்க வேண்டுமென டக்ளஸ் விதித்த நிபந்தனையால் தமிழ் அரசு கட்சி ஆடிப் போய்விட்டது. இதென்ன புது வம்பாக இருக்கிறதே என நினைத்தோ என்னவோ, கடிதம் வழங்கவில்லை.
கள்ளக்காதலிற்கு சாட்சிக் கையெழுத்து வைத்து சிக்காமலிருக்க நினைத்திருக்கலாம்.
ஆனோல்ட்டின் ஆசை பறிபோனாலும் பரவாயில்லை, தமது கற்பு முக்கியமென நினைத்தார்களோ என்னவோ!