தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்த பின்னர், தோன்றிய பல இயக்கங்களின் மூலம், பேச்சு வழக்கில் சில புதிய புதிய சொற்களும், உதாரணங்களும் தோன்றின. அவற்றில் பல கனதியான அர்த்தமுடையவை.
அப்படியான ஒன்றுதான்- ஈரோஸ், ,ஈரோஸ் பாணி.
ஈரோஸ் போராளிகளிற்கு இது கோபத்தை ஏற்படுத்தினாலும், அப்படியொரு உதாரணம் சுட்டும் பாவனை பரவலாக உள்ளது.
எந்தப் பக்கம் என இல்லாமல் எல்லாப்பக்கமும் நிற்பவர்களை, கழுவும் மீனில் நழுவும் ஆளாக இருப்பவரை அப்படிச் சொல்வதுண்டு. (அந்த அரசியல் பாணியை நாம் விமர்சிக்கவில்லையென்பதையும் குறிப்பிட்டு விடுகிறோம்) ஈரோஸ் கறாரான அரசியல் தீர்மானங்களை எடுக்காததால், அப்படி உதாரணம் சொல்வதுண்டு.
“ஆள் ஈரோஸ்காரன், ஈரோஸ் பாணி“ என அடிக்கடி உதாரணம் சொல்வதை பலர் அறிந்திருக்கலாம்.
ஈரோஸ் இப்பொழுது வீரியமான அரசியல் இயக்கமாக இல்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகளுடன் போட்டியிடும் கட்டத்தில் உள்ளது. ஈரோஸ் களத்தில் இல்லாததால், ஈரோஸை உதாரணம் சொல்லும் வழக்கம் இன்னும் சிறிது காலத்தில் இல்லாமல் போய்விடக்கூடும்.
ஆனால், அதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை, ஈரோஸ் பாணியென்பதை இனிமேல் ரெலோ பாணியென மாற்றி குறிப்பிடலாம் போலத்தான் நிலைமையுள்ளது. யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டத்தை ஒட்டி நடந்த பின்னணி சம்பவங்களை அறிந்தால், நிச்சயமாக உங்களிற்கும் அப்படித்தான் தோன்றும்.
இலட்சியத்திற்காக சாகவும் துணிந்த- ஒரு கட்டளைக்காக வெடித்துச் சிதறிய- ஆயிரமாயிரம் இளையவர்களை கண்ட இந்த இனத்தில்- அவர்களின் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்டுக்கொண்டு, எந்த இலட்சியமும் இல்லாமல், எல்லாப்பக்கமும் தாவும் அரசியல் கலாச்சாரம் உருவாகுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மார்ச் மாதம் நடுப்பகுதியுடன் முடிவடையவுள்ள நடப்பு உள்ளூராட்சிசபைகளின் யாழ் மாநகரசபையில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் என்ற ரெலோவின் சார்பில் 3 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். இன்றைய திகதியில் அவர்களில் யாரும் ரெலோவின் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் அங்கிடுதத்திகளாக காற்றடிக்கும் திசைக்கு தாவிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இன்னும் ரெலோவில் இருக்கிறார்கள். இதுதான் ரெலோ பாணி!
ரெலோவின் சார்பில் யாழ் மாநகரசபைக்கு தெரிவான ஒரு பெண் ஏற்கெனவே தமிழ் அரசு கட்சிக்கு தாவிவிட்டார். இப்பொழுது தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்.
மற்றொருவர் தனேந்திரன். கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. கட்சியின் முடிவுகளிற்கு மாறாக, பதவிக்கு வந்த கடைசி இரண்டு முதல்வர்களையும் ஆதரித்தார். இம்முறையும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஆனோல்ட்டின் இரண்டு வரவு செலவு திட்டங்களையும் ஆதரித்தார்.
இம்மாத தொடக்கத்தில் ஆனோல்ட் முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த போது, தனேந்திரன் சபைக்கு சென்று ஆதரித்து வாக்களித்திருந்தார். என்றாலும், யாருமே சபைக்கு செல்ல வேண்டாம் என்றுதான் ரெலோ தலைமை அறிவுறுத்தியிருந்தது.
தலைமையின் முடிவை மீறி கட்சி உறுப்பினர் தனேந்திரன் செயற்பட்டார். அது கூட பரவாயில்லை, அப்போது அதற்கு ரெலோ கொடுத்த விளக்கம்தான் காமெடியின் அதியுச்சம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இரண்டு கட்சிகள் மட்டத்தில் இந்த விடயம் பேசப்பட்ட போது, ரெலோவின் முடிவெடுக்கும் மட்டத்திலுள்ள ஒரு பிரமுகர் சொன்னாராம்- “எங்கள் உறுப்பினர் எதிர்த்துத்தான் வாக்களித்தாராம். ஆனால், அவர் ஆதரித்து வாக்களித்ததாக மாறி பதிவு செய்து விட்டார்களாம்“ என.
இதை சொன்ன ரெலோ பிரமுகர் படித்த மனுசன்தான். ஆனால், அதை கேட்டுக்கொண்டிருப்பவரை எவ்வளவு முட்டாளாக நினைத்து, இதை சொல்லியுள்ளார் என சிந்தித்து பாருங்கள்!
ரெலோவில் எஞ்சியிருந்தது பிரதி முதல்வர் ஈசன். அவரும் ஒரு அங்கிடுதத்திதான் என்பது இன்றைய வரவு செலவு திட்டத்தில் உறுதியாகி விட்டது.
கட்சியின் உத்தரவுப்படி வரவு செலவு திட்டத்திற்கு போகக்கூடாது, அதே நேரம் வெற்றியடைய வைக்க வேண்டும் என்பது ஈசனின் திட்டம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றைய உறுப்பினர்களையும், மணிவண்ணன் தரப்பினரையும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க ஈசன் பலத்த முயற்சி செய்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறது என மணிவண்ணன் தரப்பு உறுப்பினர்களிடம் பொய் சொன்னார். அவர்களை வாக்கெடுப்புக்கு செல்ல வைக்க எப்படியான உருட்டுப்பிரட்டு விட்டார் என்பதை நேற்று இரவு வெளிப்படுத்தியிருந்தோம்.
அந்த செய்தியை படித்து விட்டு, ரெலோவின் முக்கிய தலைவர் ஒருவர் தமிழ்பக்கத்தை தொடர்பு கொண்டு விடயத்தை கேட்டார். தமது தரப்பு உறுப்பினர்களின் அங்கிடுதத்தித்தனத்தை குறிப்பிட்டு கவலைப்பட்டவர், இரவே ஈசனுடன் பேசப் போவதாக குறிப்பிட்டார்.
இன்று காலையில் மீண்டும் அந்த பிரமுகர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
எமது செய்தியில் குறிப்பிட்டபடி யாருடனும் தான் பேசவில்லையென ஈசன் சொல்கிறாரே என குறிப்பிட்டார். அவர் உங்களிடம் பொய் சொல்கிறார் என சுருக்கமாக சொன்னோம்.
அந்த ரெலோ பிரமுகர் இன்று காலையில் தமிழ் பக்கத்துடன் பேசிக் கொண்டிருந்த போது, ஈசன் தனது வீட்டிலிருந்து பறப்பட்டு சென்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றைய பங்காளிக்கட்சியான புளொட்டின் மற்றொரு உறுப்பினர் வீட்டுக்கு சென்று, வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு நச்சரித்துக் கொண்டிருந்தார்.
இன்று காலையில் யாழ் மாநகரசபைக்கு சென்ற ஈசன், தனது அறையிலிருந்தபடி, வரவு செலவு திட்டத்திற்கு ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். ரெலோவிலிருந்து தாவிய தனேந்திரன், புளொட்டிலிருந்து தாவிய நித்தியானந்தன் ஆகியோரும் ஈசனுடன் ஒன்றாக இருந்தனர்.
இதுதான் இன்றைய ரெலோவின் நிலைமை. தலைவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி வீரவசனம் பேசிக் கொண்டிருக்க, கீழ் மட்ட பிரதேசசபை உறுப்பினர்கள் தாவிக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவிலேயே ரெலோ பாணியென உதாரணம் சுட்டி பேசும் நிலைமை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதுகூட பரவாயில்லை-இந்த சம்பவத்திற்கு பின்னர் ரெலோ தலைமை ஈசனிடம் விளக்கம் கேட்பார்கள். ஈசனும் ஒரு உருட்டு உருட்டுவார். அதை நம்பிக் கொண்டோ, அல்லது எதிர்ப்பக்கமிருப்பவர் முட்டாள் என நினைத்துக் கொண்டோ, ரெலோக்காரர்கள் ஒரு விளக்கம் சொல்லப் போகிறார்கள் அல்லவா- அதை நினைத்துத்தான் மூளை வியர்க்கிறது!