யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் நாளை (28) சமர்ப்பிக்கப்படவுள்ளது. வடமாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்ட மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட், புதிய மேயராக சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவு திட்டம். நடப்பு மாநகரசபையின் பதவிக்காலத்தில் சமர்ப்பிக்கும் 8வது வரவு செலவு திட்டம். இதுவரை அவர் சமர்ப்பித்த 7 வரவு செலவு திட்டங்களில் ஒரு முறைதான் வெற்றியடைந்தார்.
உள்ளூராட்சிசபைகளின் பதவிக்காலம் மார்ச் நடுப்பகுதியில் நிறைவடைகிறது. அதன் பின்னர் ஆணையாளர்கள், செயலாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளூராட்சிசபைகள் வந்துவிடும். அப்படியிருந்தும், யாழ் மாநகரசபையின் இம்முறை வரவு செலவு திட்டத்தை தோல்வியடைய விடக்கூடாதென்பதில் தமிழ் அரசு கட்சி அக்கறையாக இருக்கிறது. அதைவிட பன்மடங்கு அக்கறையாக மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் இருக்கிறார்.
இம்மாத நடுப்பகுதியில் ஆனோல்ட் சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தது. 14 நாட்களிற்குள் மீண்டும் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கிறார்.
கடந்தமுறை நிலவரத்தில் பெரிய மாற்றமெதுவும் ஏற்படவில்லை.
கடந்த முறை ஈ.பி.டி.பி., தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட பிரதான கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பு சபைக்கு சமூகமளிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தாலும் ஆனோல்ட்டின் வலையில் விழுந்த உறுப்பினர்களான தனேந்திரனும், நித்தியானந்தனுமே சபைக்கு சென்றனர்.
இம்முறையும் கடந்த முறையை ஒத்த நிலவரமே ஏற்படலாம்.
ஆனால், வரவு செலவு திட்டத்தில் வெற்றிபெற ஆனோல்ட் அதிகபட்ச முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.
கஜேந்திரகுமாரின் மதிலுக்கு அனுமதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் த.சித்தார்த்தன். செல்வம் அடைக்கலநாதனுடன் பேசி, ஆதரவு கேட்டார். அவர்கள் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் தமது உறுப்பினர்களை கலந்து கொள்ள வேண்டாமென அறிவித்துள்ளனர்.
யாழ் மாநகரசபை எல்லைக்குள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கட்டிய வீட்டிற்கு மதில் கட்டப்பட்டு வந்தது. அது சட்டவிரோத கட்டுமானம் என குறிப்பிட்டு, அப்போதைய முதல்வர் வி.மணிவண்ணனால் கட்டுமானத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.
ஆனோல்ட் புதிய முதல்வராக பதவியேற்ற பின்னர் அந்த மதிலுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. யாழ் மாநகரசபையிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் ஆதரவை குறிவைத்து இந்த அனுமதியளிக்கப்பட்டதா என்ற சந்தேகமும் உள்ளது.
ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த முறையை போலவே எதிர்த்து வாக்களிக்கவே வாய்ப்பிருக்கிறது.
மத தலையீடு உள்ளதா?
ஆனோல்ட்டின் வரவு செலவு திட்டத்தை வெற்றியடைய வைப்பதற்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் சிலர் தலையிட்டார்கள் என மாநகரசபை உறுப்பினர்கள் மத்தியில் ஒரு தகவலுள்ளது. என்றாலும், அப்படியான தலையீடு எதையும் தமிழ் பக்கத்தால் அறிந்து கொள்ள முடியவில்லை.
எனினும், சில தமிழ் அரசு கட்சி மாநகரசபை உறுப்பினர்கள், எதிரணியினரிடம் அப்படியான தகவலை தெரிவித்து, தமது வெற்றி உறுதியென குறிப்பிட்டுள்ளனர். எதிரணியிலிருப்பவர்களை வலைவீசிப்பிடிக்க அப்படியான தகவலைப் பரப்பினார்களா என்பது தெரியவில்லை.
இதேவேளை, வி.மணிவண்ணன் பதவிவிலகிய பின்னர், புதிய முதல்வர் தெரிவின்போது, ஈ.பி.டி.பியின் முடிவை மீறி 4 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருந்தனர். இவர்களின் பிரசன்னத்தால், மாநகரசபை கூட்டத்தை நடத்துவதற்கு தேவையான உறுப்பினர் எண்ணிக்கை கிடைத்தது. அவர்கள் ஏன் கலந்து கொண்டார்கள், அவர்களை கலந்து கொள்ள வைத்தது யார் என்ற தகவலெதுவும் வெளியாகியிருக்கவில்லை. அவர்கள் 4 பேருமே கிறிஸ்தவர்கள். அது எதேச்சையானதாகவும் இருக்கலாம். அவர்கள் 4 பேருமே கிறிஸ்தவர்கள் என்பதால், இயல்பாகவே அப்படியொரு சந்தேகம் மாநகரசபை உறுப்பினர்களிடையே ஏற்பட்டிருக்கக்கூடும்.
ஆனோல்ட்டின் கௌரவப் பிரச்சினை
இன்னும் 15 நாட்களில் உள்ளூராட்சிசபைகள் கலையவுள்ள நிலையில், வரவு செலவு திட்டத்தை வெற்றியடைய வைத்து விட வேண்டுமென முதல்வர் ஆனோல்ட் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார். எதிர்தரப்புகளின் கைகளை, கால்களாக நினைத்து பிடித்து, மன்றாட்டமாக வேண்டுகோள் விடுக்கிறார்.
இப்படித்தான், பிறிதொரு கட்சித்தரப்பிடம் ஆனோல்ட் நேரடியாக சென்று, ஆதரவு கோரியுள்ளார்.
15 நாளில் கலையவுள்ள சபைக்கு எதற்கு இப்படி முயற்சிக்கிறீர்கள் என அவர்கள் கேட்க, இது எனது கௌரவப் பிரச்சினை என்றுள்ளார்.
வரவு செலவு திட்டத்தை வெற்றியடைய வைப்பதற்காக, எதிரணி தரப்பில் ஆட்களை குறைக்கும் முயற்சியிலும் கச்சிதமாக ஈடுபட்டுள்ளார். “வைக்கோல் பட்டறை நாய் போல“ என குறிப்பிட்ட எதிரணி உறுப்பினர் ஒருவருக்கு 1 மாத தடைவிதிக்கப்பட்டது. இது உள்நோக்கமுடைய தடையென ஊகிக்கும் விதமான சம்பவங்கள் பின்னர் நடந்தன.
அந்த தடைக்குள்ளானவர் வி.மணிவண்ணன் தரப்பை சேர்ந்தவர். மணிவண்ணன் தரப்பினர் உள்ளூராட்சி ஆணையாளரை சந்தித்து இரண்டு கடிதங்கள் கையளித்தனர். தமது உறுப்பினரின் தடைக்கு எதிராக ஒரு கடிதமும், மணிவண்ணனின் நிர்வாக காலத்தில் கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் நிறுவப்பட்ட கல்வெட்டை அகற்றும் முடிவிற்கு எதிராக மற்றைய கடிதமும் கையளிக்கப்பட்டது.
இரண்டு விவகாரம் தொடர்பிலும் தனக்கு அறிக்கையளிக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர், யாழ் மாநகரசபை செயலாளருக்கு அறிவித்தார்.
இரண்டு கடிதங்களும் மாநகரசபையில் தயாரிக்கப்பட்டு விட்டன. ஆனால், சந்தை விவகாரம் மட்டுமே உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பப்பட்டது. உறுப்பினர் தடை தொடர்பான அறிக்கையை அனுப்பினால், அதை உள்ளூராட்சி ஆணையாளர் ஆராய்ந்து, தடைக்கு எதிரான முடிவையெடுத்தால் வரவு செலவு திட்டத்திற்கு சிக்கலாகி விடுமல்லவா!
ஆனால் மணிவண்ணன் தரப்பும் விடாக்கண்டர்கள். இன்று மீளவும் உள்ளூராட்சி ஆணையாளரிடம் சென்றனர். இரண்டு விடயங்கள் தொடர்பில் அறிக்கை கோரினாலும், ஒரு விடயம் பற்றியே மாநகரசபை செயலாளர் அறிக்கையனுப்பியிருக்கிறார் என்பதை அறிந்த ஆணையாளர், உடனடியாக செயலாளருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, இரண்டு விடயங்கள் பற்றிய அறிக்கை கோரிய போதும், ஒரு விடயம் பற்றியே அறிக்கையனுப்பியதற்கு கடிந்து கொண்டுள்ளார்.
கூட்டமொன்றில் இருப்பதாகவும், அறிக்கையை அனுப்பி வைப்பதாகவும் செயலாளர் சமாளித்துள்ளார்.
செயலாளர் அறிக்கையை தாமதித்தது உள்நோக்கமுடையது என்பதாலோ என்னவோ, தடைவிதிக்கப்பட்ட உறுப்பினர் நாளை கூட்டத்தில் கலந்து கொள்ளலாமென உள்ளூராட்சி ஆணையாளர் அனுமதியளித்துள்ளாராம்.
ஒரு உறுப்பினரை தடைசெய்யும் விவகாரத்தில்தான் ஆனோல்ட் தோற்கிறாரா அல்லது வரவு செலவு திட்டத்திலேயே தோற்கிறாரா என்பது நாளை காலையில் தெரிந்து விடும்.