முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்கான தேர்தலில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பின்னணியில், ஐக்கிய தேசிய கூட்டமைப்பென்ற பெயரில் தராசு சின்னத்தில் களமிறங்கும் அணியுடன் கூட்டணி வைப்பதென்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் முடிவு, பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாகியுள்ளது.
தராசுடன் கூட்டணி வைக்கும் முடிவிற்கு, இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை, இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் அரசு கட்சியினரால், கரைத்துறைப்பற்று கூட்டணி பற்றி விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல், மத்தியகுழு உறுப்பினரான கே.வி.தவராசா, கரைத்துறைப்பற்று கூட்டணியை பகிரங்கமாக விமர்சித்தார்.
மற்றையது, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் அரசு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கரைத்துறைப்பற்று கூட்டணி பற்றி விமர்சிக்கப்பட்டது.
இதுதவிர, தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கரைத்துறைப்பற்று பிரதேசசபை தேர்தலில் முஸ்லிம் சுயேச்சை சின்னமான ஐக்கிய தேசிய கூட்டணியுடன் உடன்படிக்கை செய்வது, வேலியில் போகும் ஓணானை பிடித்து வேட்டிக்குள் விடும் சம்பவத்தை போன்றது என்றார்.
அவரது கூற்றில் உண்மையிருந்தது.
நீராவிப்பிட்டி, ஹிக்கிராபுர வட்டாரத்தை கைப்பற்ற வேண்டுமென்பதற்காக முஸ்லிம் சுயேச்சைக்குழுவான ஐக்கிய தேசிய கூட்டணி களமிறக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் இந்த வட்டாரத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்றிருந்தார். இம்முறையும் அவர் வெல்லலாம் அல்லது தோற்கலாம். அத்துடன், முஸ்லிம்களிற்கு ஒரு நியமனபட்டியல் ஆசனத்தை வழங்குவது என்றும் ஒப்பதமாகியுள்ளது.
வட்டார வேட்பாளர் வெற்றியீட்டினால், தமிழ் அரசு கட்சியின் ஒப்பந்தத்தால், கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்கு 2 முஸ்லிம் வேட்பாளர்கள் தெரிவாகுவர். வட்டார வேட்பாளர் தோல்வியடைந்தால் கூட பரவாயில்லை. நியமன பட்டியல் மூலம் ஒரு உறுப்பினர் தெரிவாகுவார்.
இதன்மூலம் கரைத்துறைப்பற்று பிரதேசசபையில் முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதிக்கம் அதிகரிக்கவுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரமுகர்கள் இன்று கூடி கலந்துரையாடினர். இதில், கரைத்துறைப்பற்று கூட்டணி தொடர்பில் பரவலாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், இந்த விவகாரம் பற்றி தமிழ் அரசின் மத்திய, அரசியல்குழுக்களில் இது பற்றி கலந்துரையாடியிருக்கவில்லை. இதனை இன்று கே.வி.தவராசாவும் தெரிவித்தார். மட்டக்களப்பு கட்சிப் பிரமுகர்கள் கூட்டத்திலும் இது விவாதிக்கப்பட்டது.
முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட எதிர்மறை அப்பிராயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக உள்ளது. இந்த நிலையில், கரைத்துறைப்பற்று நிலைப்பாடு, தம்மை அசௌ கரியப்படுத்துவதாக இன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசு பிரமுகர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுப்பதெனில் கட்சிக்குள் கலந்துரையாட வேண்டும் என இன்று மட்டக்களப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முஸ்லிம் சுயேச்சைக்குழுவுடன் செய்யப்பட்ட இரகசிய ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் தமிழ் அரசு கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்த ஒப்பந்தங்களின் பின்னணியில், கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை நியமிக்கும் திட்டமுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதேவேளை, கரைத்துறைப்பற்றில் முஸ்லிம் சுயேச்சைக்குழுவுடனான ஒப்பந்தம் பற்றிய விளக்கமளிப்பு கூட்டத்தில், இலங்கை தமிழ் அரசு கட்சியி. தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அன்று சற்று சாமதமாக ஆரம்பித்த புதுக்குடியிருப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவை, முல்லைத்தீவு கூட்டத்தை தவிர்த்து விட்டார்.
அவரையும் மீறி, சுமந்திரன் தன்னிச்சையாகவே கூட்டணி முடிவை எடுத்ததால் அவர் சுமந்திரனுடன் தெடர்புடைய- சிக்கலான விவகாரங்கள் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்வதில்லையென குறிப்பிடப்படுகிறது.