29.3 C
Jaffna
March 29, 2024
தமிழ் சங்கதி

கரைத்துறைப்பற்றில் ‘மாறுவேடத்தில்’ களமிறக்கம்: தமிழ் அரசு கட்சி வாக்கில் தெரிவாகவுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள்!

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்கான தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதற்கான மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரைத்துறைப்பற்று பிரதேசசபை தேர்தலில் போட்டியிடும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ள முஸ்லிம் சுயேச்சைக்குழுவில் தமிழ் அரசு கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

இதற்கான விளக்கமளிப்பு கூட்டம் நேற்று முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் கலாச்சார மண்டபத்தில் நடந்தது.

கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்கான தேர்தலுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாற்று ஏற்பாடாக முஸ்லிம் சுயேச்சைக்குழுவான ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் தமிழ் அரசு கட்சி வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

முல்லைத்தீவில் நீராவிப்பிட்டி பகுதியில் கணிசமான முஸ்லிம் மக்கள் குடியேறியுள்ளனர். முன்னர் ரிஷாத் பதியுதீன் அமைச்சராக இருந்த சமயத்தில் தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் அடாத்தாக காடழிக்கப்பட்டு, முஸ்லிம் மக்கள் குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. முல்லைத்தீவு தமிழ் மக்களிடமும்  இது குறித்த எதிர்ப்புணர்வு இருந்தது.

அப்போது தமிழ் அரசு கட்சியும் இந்த குடியேற்றங்களிற்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கியது.

யுத்தத்தின் பின் மீள் குடியேறிய, குடியமர்ந்த பகுதியே, நிராவிப்பிட்டி, ஹிக்கிராபுர வட்டாரம்.

இப்பொழுது, அந்த முஸ்லிம் மக்களே தமிழ் அரசு கட்சியினர் பதவிகளில் அமர, ஒரு வாய்ப்பேற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

நீராவிப்பிட்டி வட்டாரத்தில் மட்டும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்வதால், அங்கு ஒரு பிரதேசசபை உறுப்பினரை முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், உள்ளூராட்சி தேர்தல் விதிகளிற்கு இணங்க, அனைத்து வட்டாரங்களிற்கும் வேட்பாளர்கள் இடப்பட்டு, வேட்புமனு சமர்ப்பித்தனர். அதில், ஏனைய வட்டாரங்களில் டம்மி வேட்பாளர்களே இடப்பட்டனர். அதாவது நீராவிப்பிட்டி வட்டாரத்தில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த பலரின் பெயரை டம்மியாக இட்டு, வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தனர்.

அவர்கள் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் தராசு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

தமிழ் அரசு கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமும், தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் பேசி ஏற்படுத்திக் கொண்ட இணக்கத்தின் அடிப்படையில்,  தராசு சின்னத்தில் தமிழ் அரசு கட்சி வேட்பாளர்கள் களமிறங்க ஏற்பாடானது.

இதற்கான பிரதியுபகாரம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை. சிலவேளைகளில், கடந்தமுறையை போல, கிழக்கு மாகாண முதலமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவதற்கு, தமிழ் அரசு கட்சி ஆதரவளிக்கக்கூடும்.

முஸ்லிம் சுயேச்சைக்குழுவில் தமிழ் அரசு கட்சி வேட்பாளர்கள் களமிறங்கும் ஏற்பாடு, சில இணக்கப்பாடுகளுடன் எட்டப்பட்டுள்ளது.

அதாவது, ஐக்கிய தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்கும் நீராவிப்பிட்டி,  ஹிக்கிராபுரம் வட்டாரத்தில், முஸ்லிம் வேட்பாளரே களமிறங்குவார். ஏனைய 12 முஸ்லிம் வேட்பாளர்களும் பதவிவிலகி வழியேற்படுத்திக் கொடுக்க, அங்கு தமிழ் அரசு கட்சியினர் போட்டியிடுவார்கள்.

அதாவது, சட்டஏற்பாடுகளின்படி, வேட்பாளர் ஒருவர் கட்சியிலிருந்தும் விலகினாலே அவர் முறைப்படி, வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகியதாக கருதப்படும். எனவே, கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் ஹிக்கிராபுரம் தவிர்ந்த ஏனைய 12 வட்டாரங்களின் வேட்பாளர்களும், 11 நியமனப்பட்டியல் வேட்பாளர்களும் தேர்தலில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக கடிதம் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளனர்.

அதன்பின்னர், 21 நாட்களின் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், கட்சியின் செயலாளரினால் புதிய வேட்பாளர்கள் நியமிக்கப்படலாம். அதன்படி, அடுத்த மாத நடுப்பகுதியில், முஸ்லிம்களின் ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர்கள் களமிறங்குவார்கள்.

வெட்கப்படும் வேட்பாளர்கள்

முஸ்லிம்கள் நீராவிப்பிட்டியில் அடாத்தாக குடியேற்றப்பட்டது தொடர்பாக முல்லைத்தீவில் தமிழ் மக்களிடம் கணிசமான எதிர்ப்புணர்வு உள்ளது. கிழக்கில் இரு சமூகங்களிற்கும் உள்ளதை போன்ற முரண் இல்லாவிட்டாலும், வடக்கில் ஏனைய பகுதிகளில் உள்ளதைவிட, முல்லைத்தீவில் இரு சமூகங்களிற்கிடையிலான எதிர்ப்புணர்வு அதிகம்.

இந்த பின்னணியில் முஸ்லிம் சுயேச்சைக்குழுவில் களமிறங்குவது பல வேட்பாளர்களிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வட்டார வேட்பாளராகவும் வேண்டுமே. அதனால், கமுக்கமாக தேர்தல் வரை இருந்து விட வேண்டுமென்பது அவர்களின் நிலைப்பாடு.

கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் வேட்பாளர்கள் இருவர் தமிழ்பக்கத்துடன் பேசும்போது, முஸ்லிம் கட்சியுடனான ஒப்பந்தம் குறித்து அவ்வளவு முக்கியத்துவமாக செய்தி பிரசுரிக்க வேண்டாமென கேட்டுக் கொண்டனர்.

கரைத்துறைப்பற்று வேட்புமனு ஏன் நிராகரிக்கப்பட்டது?

கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததுதான். வேட்புமனு நிராகரிக்கப்பட்டதும், பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் அவற்றில் உண்மையான காரணம் வெளியாகியிருக்கவில்லை.

அரசியல் கட்சிகள் என்றால் பிரதேசங்களில் இரண்டு அணிகள் இருப்பது வழக்கம். இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் அது சற்று அதிகம். இரண்டு தலைவர்கள் உள்ள கட்சியில் இரண்டு அணிகள் இருப்பது ஆச்சரியமா என்ன!/

முல்லைத்தீவு மாவட்டக்கிளை தலைவர் வைத்தியர் சிவமோகன். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றொரு முகாமின் தலைவர்.  இரண்டு தரப்பிற்குமிடையில் முடிவில்லாத உரசில் தொடர்கிறது.

வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் இறுதிநாளின் சிவமோகன் தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு மாவட்ட செயலகம் செல்லவிருந்தார். ஒவ்வொரு பிரதேசசபை சார்பில் ஒவ்வொருவரும் துணைக்கு சென்றனர். கரைத்துறைப்பற்று சார்பில் தனது அணியை சேர்ந்த ஒருவரை அழைத்துச் செல்ல சிவமோகன் திட்டமிட்டிருந்தார். ஆனால், ரவிகரன் தரப்பினர் தமது அணியை சேர்ந்த ஒருவரை அழைத்துச் செல்ல வற்புறுத்தினர். மாவட்ட செயலகத்தில் 17 வருடம் பணியாற்றிய அனுபவசாலியென குறிப்பிட்டு ஒருவரை அனுப்பி வைத்தனர்.

மாவட்ட செயலகத்திற்குள் தமிழ் அரசு கட்சியினர் உட்கார்ந்திருந்த சமயத்தில், வேட்புமனுக்களை சிவமோகன் மீள சரிபார்த்துக் கொண்டிருந்த போது, தெரிவத்தாட்சி அலுவலர் அறையிலிருந்து ஒரு கட்சி வெளியேற, அடுத்த கட்சியை வருமாறு அழைத்தனர். கரைத்துறைப்பற்று பிரதேசசபை வேட்புமனுவை தன்னுடன் வைத்திருந்த ரவிகரன் தரப்பை சேர்ந்தவர், திடீரென எழுந்து சென்று, அந்த அறைக்குள் நுழைந்து விட்டார். இதை மற்றவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அவர் வீடியோ கமராவின் எல்லைக்குள் நுழைந்து, கதிரையில் உட்கார்ந்து விட்டமையால், அவரே வேட்புமனுவை சமர்ப்பிக்க வந்தவராக கருதப்பட்டார். அவர் அங்கீகரிக்கப்பட்ட முகவராக அமையததால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிறிதரனை மௌனமாக்கியது எது?

Pagetamil

வெடுக்குநாறிமலை அட்டூழியம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட முஸ்தீபு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்பட்டதால் கடல் கடக்க அனுமதிக்க முடியாது: வி.மணிவண்ணனின் கோரிக்கையை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு!

Pagetamil

‘திருகோணமலை குழப்பத்துக்கு முடிவில்லாமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம்’: தமிழ் அரசு கட்சியின் தலைமைக்கு இரா.சம்பந்தன் மீண்டும் அறிவித்தல்!

Pagetamil

‘எனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்படுகிறார்கள்’: சுமந்திரனை தடுப்பது உத்தியா?; சம்பந்தனின் புகாரின் பின்னணி!

Pagetamil

Leave a Comment