25.3 C
Jaffna
January 21, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தீவிரமடையும் தலைமைத்துவ போட்டி: அடுத்த தலைவர் தெரிவில் வெற்றியீட்டப் போவது யார்?

இலங்கை தமிழ் அரசு கட்சி மீண்டுமொரு நெருக்கடியை விரைவில் சந்திக்கவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் சிலகாலமாக உருவாகி வரும் குழுவாதத்தின் இறுதி மோதலாக அமையப் போகும் புதிய கட்சி தலைவர் தெரிவில், இந்த நெருக்கடி கட்சிக்குள் உருவாகும் என தெரிகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, உள்ளூராட்சி தேர்தலை தனியாக சந்திப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு, மக்கள் மத்தியிலும் கணிசமான அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

கட்சியின் மிக நீண்டகால செயற்பாட்டாளர்கள் பலரும் கட்சியின் அண்மைய முடிவுகளில் கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த பின்னடைவுடன், கட்சிக்குள் உருவாகியுள்ள குழுவாதமும் கட்சிக்கு பெரிய தலையிடியாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினைகள் கட்சியை மிகப்பெரியளவில் பாதிக்கும் என்ற கருத்து, கட்சிக்குள்ளேயே உருவாக ஆரம்பித்துள்ளது.

இந்த பின்னணியில், கட்சியின் புதிய தலைவர் விவகாரம் நெருக்கடியை அதிகரிக்கும் என உறுதியாக நம்பலாம். புதிய தலைவர் தெரிவின் போது, கட்சி வெளிப்படையாக இரண்டு பட அல்லது உள்ளகரீதியாக இரண்டுபட பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா விரைவில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவும் வாய்ப்புண்டு. அந்த முடிவை அவர் விரும்பி எடுக்கிறாரா அல்லது அந்த முடிவை தவிர வேறெதையும் எடுக்க முடியாத நிர்பந்தத்திற்கு அடிபணிந்தாரா என்பது மற்றொரு விடயம்.

அனேகமாக, சுமந்திரனின் வியூகத்தில் சிக்கி, அந்த முடிவை தவிர வேறெந்த முடிவையும் எடுக்க முடியாத அழுத்தமே யதார்த்தமாக இருக்கக்கூடும். இந்த சூழலுக்கு காரணம் என்ன? மாவை சரியாக செயற்பட்டாரா? சுமந்திரன் பலமானவரா போன்ற காரணங்கள் மற்றொரு தனி அம்சம். அதை அடுத்த வாரம் விரிவாக பார்க்கலாம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே மாவை சேனாதிராசாவை களத்தை விட்டு அகற்றுவதென சுமந்திரன் முடிவெடுத்து விட்டார். இதனால்தான் மாவைக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படவில்லை.

கட்சிக்குள் யாராவது ஒருவர் ஒதுக்கப்படுவது உலகெங்குமுள்ள பொதுவான விடயம். ஆனால், கட்சிக்குள் தலைவரே ஒதுக்கப்பட்டது இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் மாத்திரம்தான் நடந்திருக்கும்.

எம்.ஏ.சுமந்திரனின் தன்முனைப்பும், தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட சுயசிக்கல்களும் மாவை சேனாதிராசாவை கட்சித்தலைமை பிடியை மெதுவாக இழக்க வைத்தது. இன்றைய திகதியில் கட்சிக்குள் முக்கிய முடிவொன்றை, எம்.ஏ.சுமந்திரனை கேட்காமல் எடுக்க முடியாத நிலைமை மாவைக்கு.

முன்னர் ஒருகாலத்தில்தான் இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் சுமந்திரன் அணியென்ற ஒரு அணி இருந்தது. ஆனால் இப்பொழுது கட்சியே கிட்டத்தட்ட சுமந்திரன் அணியாகி விட்டதை போன்ற தோற்றம் தென்படுகிறது.

தமிழ் அரசு கட்சியின் முக்கிய முடிவுகளையும், செயற்பாடுகளையும் சுமந்திரனும், அவரது அணியினருமே தலைமைதாங்கி செயற்படுகிறார்கள் என்ற தோற்றம் உருவாகியுள்ளது. எம்.ஏ.சுமந்திரனை கட்சிக்குள் எதிர்த்தவர்கள் யாருமே கட்சிக்குள் நின்றுபிடிக்கவில்லையென்ற கடந்தகால வரலாற்றின் அடிப்படையில், கட்சிக்குள் உள்ள சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் மௌனமாக இருக்கிறார்கள்.

இம்முறை உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர் தெரிவில், எம்.ஏ.சுமந்திரனின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் அணியினர் வேட்புமனுக்களை நேரடியாக கையாண்ட பகுதிகளில், மாவை சேனாதிராசாவின் ஆதரவாளர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மறுவளமாக, மாவை சேனாதிராசா தொகுதிக்கிளை தலைவராக உள்ள பகுதியிலுள்ள வலிவடக்கு பிரதேசசபை வேட்பாளர் தெரிவில் சுமந்திரன் ஆதரவாளர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லையென்பதால், மாவையின் வீட்டிற்கு நேரில் சென்ற சுமந்திரன், அந்த நபரை வேட்பாளராக்கினார்.

தனது ஆதரவாளர்களை கூட தக்க வைக்க முடியாத நெருக்கடி மாவைக்கு.

இந்த பின்னணியில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் அடுத்த தேசிய மாநாட்டில் புதிய தலைவர் தெரிவு இடம்பெறுமென்பது ஏறக்குறைய உறுதியாகி வருகிறது. கடந்த சில வருடங்களின் முன்னரே நடந்திருக்க வேண்டிய தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டு வந்து, இப்பொழுது புதிய தலைவர் தெரிவில் களமிறங்கப் போகும் வேட்பாளர்களின் அழுத்தத்தினால் நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது.

அனேகமாக உள்ளூராட்சி தேர்தல் முடிந்த ஓரிரு மாதங்களில் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு சிலர் குறிவைத்திருந்தாலும், பிரதான போட்டியாளர்களாக எம்.ஏ.சுமந்திரனும், சி.சிறிதரனுமே விளங்குகிறார்கள். இருவருமே அடுத்த தேசிய மாநாட்டில் தலைமை பதவிக்கு போட்டியிடவுள்ளதாக நேரடியாகவோ, சூசகமாகவோ கட்சித் தலைமைக்கு தெரிவித்து விட்டனர்.

தேசிய மாநாட்டில் நடக்கும் வாக்கெடுப்பில் கட்சித் தலைவர் தெரிவு செய்யப்படுவார்.

இலங்கை தமிழ் அரசு கட்சி வரலாற்றில் இதுவரை காலமும் கட்சித்தலைவர் தெரிவு வாக்கெடுப்பு வரை சென்றதில்லை. மூத்தவர் ஒருவர் போட்டியிட்டால், அடுத்தவர் வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். இம்முறை சுமந்திரனும், சிறிதரனும் கட்டாயமாக போட்டியிருவார்கள் என்பதே இதுவரையான தகவல்.

இம்முறை, இருவரில் யாராவது ஒருவர் விலகிக் கொள்ளும் களச்சூழல் இல்லை. கடந்த 10 வருடங்களாக தமிழ் அரசு கட்சிக்குள் வளர்ந்த குழு வாதம், இப்பொழுது இறுதி மோதலுக்கு தயாராகி வருகிறது.

இம்முறை சிறிதரன் தலைமை பதவியேற்றால், குறைந்தது அடுத்த 5 வருடங்களிற்கு அவரை அந்த பதவியிலிருந்து அசைக்க முடியாது. மாவை சேனாதிராசாவின் இயல்புகளிற்கு சிறிதரன் நேர்மாறானவர். அரசியலில் அந்த அணுகுமுறை நீண்டகால அடிப்படையில் பலனளிக்குமா என்பதும் ஒரு வாதம்தான். ஆனால், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக உறுதியான முடிவுகளை சிறிதரன் எடுப்பார்.

கிளிநொச்சியில் தனது அணியிலிருந்த ஒரு குழுவை சுமந்திரன் பிரித்தெடுத்து, வளர்த்த போது, உள்ளூராட்சி வேட்பாளர் பட்டியலில் அவர்கள் அத்தனை பேரையும் தூக்கியெறிந்து விட்டார். அவர்கள் சுயேச்சையாகவோ அல்லது எதிர்தரப்பிலோ போட்டியிடுவார்கள் என்பதை அறிந்தும், தனது கட்டுப்பாட்டில் இல்லாதவர்களை துணிந்து தூக்கியெறிந்தார்.

இன்னும் சில பழுத்த அரசியல்வாதிகளெனில், அந்த குழுவை வேறுவிதமாக கையாண்டிருக்கக்கூடும். எனினும், சிறிதரனின் அணுகுமுறையையும் கட்சியிலுள்ள கணிசமான தரப்பினர் ரசித்தனர்.

ஒருவேளை சிறிதரன் கட்சித் தலைவரானால், இப்போதுள்ளதை போல, அணிகள் தலைதூக்கி முன்னணியில் செயற்படும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

அதுதவிர, சுமந்திரன் ஆதரவாளர்களை களையெடுக்கலாம். அல்லது முக்கிய பொறுப்புக்களில் நியமிக்கப்படாமல் விடப்படக்கூடும்.

எம்.ஏ.சுமந்திரன் தலைமை பதவியேற்றால், விரைவிலேயே கட்சியின் தீர்மானமிக்க பொறுப்பொன்றில் சாணக்கியன் நியமிக்கப்படுவார்.  ஏற்கெனவே பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் தரப்பிற்கு இணக்கமானவர்தான்.

சிறிதரன் தலைமைக்கு வந்தால், தனக்கு இணக்கமானவர்களிற்கு முக்கிய பொறுப்பை வழங்குவார். சுமந்திரன் தற்போது கட்சிக்குள் கொண்டுள்ள வலுவான பிடியை இழப்பார். எம்.ஏ.சுமந்திரன் அப்படியொரு சூழலை விரும்பமாட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய அரசியலில் வகித்த முக்கிய பாத்திரத்தை தற்போது இழந்து விட்டார். கட்சி அரசியலிலும் முக்கியத்துவத்தை இழந்த பாத்திரமொன்றை அவர் விரும்பமாட்டார். அதனால் அவர் நிச்சயம் போட்டியிட்டே தீருவார்.

மறுவளமாக, எம்.ஏ.சுமந்திரனுக்கு உள்ள நெருக்கடிகள் சி.சிறிதரனுக்கும் உள்ளது. சுமந்திரன் கட்சி தலைவரானால் அவரும் குறிப்பிட்ட காலம் கோலோச்சுவார். பின்னாலேயே சாணக்கியனையும் அழைத்துச் செல்வார்.

இதுதவிர, எம்.ஏ.சுமந்திரன் தனக்கு ஆயுதப் போராட்டத்தில் உடன்பாடில்லையென தெரிவித்து வருகிறார். இந்த விடயத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அவரது நிலைப்பாடு மாறி, புலிகள் அமைப்பின் கப்டன் பண்டிதரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிலைமையும் வந்தது. தேர்தல் அரசியல் அனைவரையும் மாற்றும்.

என்றாலும், சுமந்திரனின் பழைய நிலைப்பாடுகளால், கட்சிக்குள் ஒரு கணிசமான பகுதியினர் அவரை எதிர்க்கிறார்கள். தற்போது, கட்சியே சுமந்திரன் அணி மாதிரியாக மாறிவிட்டது என முன்னர் குறிப்பிட்டிருந்தோம். அது, முகத்தோற்ற அளவிலான நிலைப்பாடு. சுமந்திரனை விமர்சிப்பவர்களிற்கு போக்கிடமில்லாததால், அந்த தரப்பினர் மௌனமாக இருக்கிறார்கள். அவர்கள் தமது விமர்சனங்களை பேஸ்புக்கில் எழுதுவதில்லை. இப்போது முக்கிய முடிவுகளிலும் தலையிடுவதில்லை. அவர்கள் மௌனமாக இருக்க, சுமந்திரன் தரப்பினர் செயற்பட, கட்சியே சுமந்திரன் அணியை போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

சுமந்திரன் விமர்சகர்கள், சுமந்திரன் தலைமை பதவிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். சுமந்திரன் தலைமை பதவிக்கு வந்தால் தாம் கட்சியை விட்டு விலகி விடுவோம் என, தற்போது மௌனமாக உள்ள பல பிரமுகர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ்பக்கத்திடம் தெரிவித்திருந்தனர்.

நீண்டகால கட்சி செயற்பாட்டாளர்களான அவர்கள், அவ்வளவு இலகுவில் வெளியேறும் முடிவிற்கு வரமாட்டார்கள். சுமந்திரன் கட்சி தலைமைக்கு வராத சூழலை உருவாக்க முயற்சிப்பார்கள். அவர்களின் தெரிவு சிறிதரனாக இருக்கும்.

தலைமை போட்டி வாக்கெடுப்பை விரும்பாமல் சிறிதரன் விலக விரும்பினால் கூட, அதற்கு வாய்ப்பிருக்காது.

தற்போதைய சூழலை பற்றி சுருக்கமாக குறிப்பிட்டால்- சிறிதரன் போட்டியிட்டால் சுமந்திரன் போட்டியிடுவார். சுமந்திரன் போட்டியிட்டால் சிறிதரன் போட்டியிடுவார்.

இருவருமே அரசியல் எதிர்காலத்துடன் தொடர்புடைய ஒரு முக்கிய சந்தர்ப்பத்தை எதிர்கொள்கிறார்கள்.

கட்சிக்குள் யாருக்கு ஆதரவு?

இன்றைய திகதிப்படி, கட்சிக்குள் தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பு நிகழ்ந்தால், அனேகமாக சிறிதரன் வெற்றிபெறவே வாய்ப்புள்ளது. எனினும், கடந்த 6 மாதங்களின் முன்னர் இருந்ததை போன்ற சூழல் தற்போதில்லை. எம்.ஏ.சுமந்திரன் இணக்கமான அணுகுமுறையின் மூலம் பலரை வசப்படுத்தி வருகிறார். அதனால் 6 மாதங்களிற்கு முன்பிருந்ததை விட தனது ஆதரவை தற்போது பெருக்கியுள்ளார். என்றாலும், வெற்றிக்கு தேவையான ஆதரவை சிறிதரன் தக்க வைத்துள்ளதாகவே கருதப்படுகிறது.

அடுத்த மாநாட்டிற்கான காலம் தள்ளிச்சென்றால், எப்படியான நிலைமையென்பதை அப்போதுதான் உறுதியாக கூற முடியும்.

கட்சியின் மத்திய, பொதுக்குழுவில் உள்ள வடக்கில் கடந்த சில வருடங்களில் அரசியலுக்கு வந்தவர்கள் தவிர்ந்த ஏனையவர்களும், கிழக்கில் பெரும்பாலானவர்களும் சிறிதரனை ஆதரிக்கிறார்கள்.

3வது போட்டியாளர்

கட்சித் தலைமை பதவிக்கு இந்த இரண்டு போட்டியாளர்கள் தவிர்ந்த மற்றுமொரு முக்கிய போட்டியாளரும் உள்ளார். அவர் சீ.வீ.கே.சிவஞானம்.

மாவை சேனாதிராசா தலைமை பதவிக்கு போட்டியிடா விட்டால் நான் போட்டியிடுவேன் என ஏற்கெனவே பகிரங்கமாக கூறியுமுள்ளார். அவரும் அடுத்த தலைமை பதவி பந்தயத்தில் களமிறங்க ஆர்வமாக உள்ளார். எனினும், கட்சி மரபிற்கு மாறாக போட்டியில் குதிக்க தயாராக இல்லை.

சுமந்திரன், சிறிதரன் என்ற இரு துருவ போட்டி, கட்சியை உடைத்து அல்லது நிரந்தர குழப்பத்தை ஏற்படுத்தி விடலாமென கருதும் கட்சியின் ஒரு சாரார், தற்காலிக ஏற்பாடாக சீ.வீ.கே.சிவஞானத்தை நியமிக்கலாமென கருதுகிறார்கள்.

கட்சிக்குள் பிளவில்லாமல் ஒற்றுமையாக தலைமை பதவியை தந்தால் மாத்திரம் ஏற்கத் தயார் என்பது சீ.வீ.கேயின் நிலைப்பாடு.

இதேவேளை, மாவை சேனாதிராசா மேலும் ஒரு வருடம் தலைமைப்பதவி வகிக்க வேண்டுமென கட்சிக்குள் இன்னொரு யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு மாற்று ஏற்பாட்டின்படி மாவை அல்லது சீவீகே போன்ற ஒருவர் தலைவர்களாக தொடர்வார்களா அல்லது சிறிதரன், சுமந்திரன் தலைமை தெரிவில் போட்டியிடுவார்களா என்பது அடுத்த ஓரிரண்டு வாரத்திற்குள் இறுதியாகி விடும்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment