துருக்கி மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் உயிர் மற்றும் உடைமைகள் பெருமளவில் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் 8,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், நிலநடுக்கத்தினால் துருக்கி அமைந்திருக்கும் டெக்டோனிக் தகட்டை மூன்று மீட்டர் வரை நகர்த்தியிருக்கலாம் என்று ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 300இற்கும் அதிகமான நில பின் அதிர்வுகள் பதிவாகின.
திங்கட்கிழமை நிலநடுக்கத்தின் மையம் துருக்கியின் காஜியான்டெப் நகருக்கு அருகே சுமார் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. இந்த நகரத்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வசிக்கிறது.
அரேபிய டெக்டோனிக் தட்டு வடக்கு நோக்கி நகர்ந்ததால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பின்னர் நிபுணர்கள் தெரிவித்தனர்.
துருக்கியானது அனடோலியன் தட்டு, அரேபிய தட்டு மற்றும் யூரேசிய தட்டு ஆகியவற்றின் எல்லையில், ஆபத்தான அமைவிடத்தில் உள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அனடோலியன் தட்டுக்கும் அரேபிய தட்டுக்கும் இடையில் சுமார் 225 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்பட்டுள்ள விரிசல் சேதமடைந்துள்ளது.
நில அதிர்வு நிபுணரும், இத்தாலிய தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலைக் கழகத்தின் தலைவருமான கார்லோ டோக்லியோனி, பூகம்பத்திற்குப் பிறகு, துருக்கி “சிரியாவுடன் ஒப்பிடும்போது ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை” கூட நகர்ந்திருக்கலாம் என்று கூறினார்.
இருப்பினும், பூர்வாங்க தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு ஒரு உறுதியான முடிவை உருவாக்க கூடுதல் தகவல்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு புவியியல் பேராசிரியரான பாப் ஹோல்ட்ஸ்வொர்த், நிலநடுக்கத்தின் அளவைக் கருத்தில் கொண்டு தட்டு மாற்றம் “கச்சிதமாக நியாயமானது” என்று கூறினார்.
“ஒரு பூகம்பத்தின் அளவு மற்றும் நிகழும் வழக்கமான தட்டின் நகர்வு ஆகியவற்றிற்கு இடையே மிகவும் கணிக்கக்கூடிய, பரவலாக ஆவணப்படுத்தப்பட்ட உறவு உள்ளது” என்று கூறினார்.
“6.5 முதல் 6.9 வரையிலான அதிர்வு ஒரு மீட்டர் நகர்வுடன் தொடர்புடையது – அறியப்பட்ட மிகப்பெரிய பூகம்பங்கள் 10 முதல் 15 மீட்டர் வரை நகரச்செய்யும்” என்று அவர் மேலும் கூறினார்.
“துருக்கியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து 3 முதல் 6 மீட்டர் வரையிலான கிடைமட்ட இடப்பெயர்வு முற்றிலும் நியாயமானது” என்று அவர் மேலும் கூறினார்.