26.3 C
Jaffna
March 23, 2023
முக்கியச் செய்திகள்

13வது திருத்தத்தையும், ஒற்றையாட்சியையும் வெளிப்படையாக நிராகரிக்காவிட்டால் பல்கலைகழக மாணவர் பேரணிக்கு ஆதரவில்லை: தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

13வது திருத்தத்தையும், ஏக்கிய ராஜ்ஜிய அடிப்படையிலான அரசியல் தீர்வையும் நிராகரிப்பதாக பல்கலைகழக மாணவர் போராட்டத்தின் முன்னதாக வெளிப்படுத்தாத பட்சத்தில், இந்த போராட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இன்று (31) யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

சுதந்திரதினத்திற்கு எதிராக வருடாந்தம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடத்தும் எதிர்ப்பு நடவடிக்கைகள் வழக்கம் போல இந்த வருடமும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெப்ரவரி 4ஆம் திகதி அனுட்டிக்கப்படும் சிறிலங்காவின் 75வது சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாளாகும். கிட்டத்தட்ட 518 வருடங்களின் முன்னர் தமிழ் தேசத்தின் ஒரு பகுதியின் இறைமையை போர்த்துக்கேயரிடம் இழந்தது. படிப்படியாக ஒல்லாந்தர், ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பின் காரணமாக தேசத்தின் இறையாண்மையை இழந்தோம். அந்த இறைமை 1946ஆம் ஆண்டு சிங்களவர்களிடம் தாரைவார்க்கப்பட்டது. தமிழர்கள் இந்த தீவில் ஒரு காலனித்துவ ஆட்சியின் கீழேயே வாழ்ந்து வந்தனர்.

எங்களுடைய தேசம், இறைமை, சுயநிர்ணம் அங்கீகரிக்கப்பட்டு ஆட்சியதிகாரம் கிடைக்கும் போதே, எமது சுதந்திரதினமாக அனுட்டிக்கப்படும்.

சிறிலங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுட்டித்து வருகிறோம். எங்களுடைய தேசம், இறைமை, சுயநிர்ணம் அங்கீகரிக்கப்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர்.

2009 இன் பின் தலைமைத்துவத்தை ஏற்றவர்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து , தமது சுதந்திரநாளாக கொண்டாட முற்பட்டனர். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுதந்திரதினத்தில் பங்கேற்று, சிங்கக்கொடி ஏந்தி, சுதந்திரநாளாக கொண்டாட முற்பட்டனர். என்றாலும், தமிழ் மக்கள் அதை கடுமையாக எதிர்த்ததால், அவர்கள் கூட, இன்றைய நாளை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வழக்கம் போல வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் கருப்பு கொடி பறக்கவிட்டு, துக்க நாளாக அனுட்டிக்க வேண்டும்.

பெப்ரவரி 4ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைகழக்கத்தில் இருந்து ஆரம்பிக்கும் பேரணிக்கு எமது ஒத்துழைப்பையும் கோரியிருந்தனர். அவர்களிற்கு கூறியிருந்தோம், அந்த முயற்சிக்கு எமது ஒத்துழைப்பு இருக்கும், ஆனால் பேரணியில் வைக்கப்படும் கோரிக்கைகள் மிக தெளிவாக, வெளிப்படையாக இருக்க வேண்டும். அது பற்றிய இணக்கப்பாடு ஏற்படுமிடத்து எமது ஆதரவை தெரிவிக்க முடியுமென அவர்களிற்கு தெரிவித்தோம்.

அவர்களிடம் பேரணியின் நோக்கம் பற்றி கேட்டபோது, சுதந்திரதினம் தமிழர்களுடையதல்லவென்றும், சமஷ்டி தீர்வை வலியுறுத்தி பேரணியை செய்யப்போவதாக கூறியிருந்தனர்.

அவர்களிடம் கூறினோம், இந்த கோரிக்கைகள் 1949ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தெளிவாக முன்வைக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. இன்றைய காலகட்டத்தில் நிரந்தரமான அரசியல்தீர்வு, புதிய அரசியல்யாப்பு பற்றி அரசும், தமிழ் தரப்புக்களும் பேசிவரும் நிலையில், தமிழ் மக்களிற்கு தேவையான அரசியல்தீர்வு பற்றி பல்வேறு ஏமாற்று நடவடிக்கைகள் செய்யப்பட்டு வரும் சூழலில், பல்கலைகழக்கழக மாணவர்கள் சில விடயங்களை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அந்தவகையில் 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தமும், மாகாணசபைகளும் கொண்டு வரப்பட்ட போதே, விடுதலைப் போராட்ட தலைமை சக்தியான விடுதலைப் புலிகளாலும், ஜனநாயக அமைப்பான தமிழர் விடுதலை கூட்டணியும் முற்றாக நிராகரித்தன. 13வது திருத்தம் ஒற்றையாட்சிக்குட்பட்டது, அதிகாரங்கள் ஆளுனரிடமும், ஜனாதிபதியிடமும் குவிந்துள்ளன என்பதால் நிராகரிக்கப்பட்டது.

36 லருடங்களின் பின் தமிழ் அரசியல் பரப்பில் உள்ளவர்கள் 13வது திருத்தத்தின் அடிப்படையில் ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வை  ஏற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், 13வது திருத்தம் தீர்வுமல்ல, தொடக்க புள்ளியுமல்ல என்பதை மகஜரில் தெளிவாக விளக்க வேண்டும், முன்கூட்டியே தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.

அதுமட்டுமல்ல, 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய அரசியலமைப்பிற்கான அரசியல் நிர்ணய சபையை அறிவித்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்  பங்கேற்று, புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால வரைபு தயாரித்திருந்தனர். இதில்  பௌத்தம் முதன்மை மதமென்பதை ஏற்றுக்கொள்வதாக கூட்டமைப்பின் தலைவர் எழுத்துமூலம் வழங்கியுள்ளார். வடகிழக்கு இணைப்பு, சமஷ்டியை கைவிடவும், ஏக்கிய ராஜ்ஜியவை ஏற்கவும் இணங்கியிருந்தனர்.

ஏக்கிய ராஜ்ஜிய அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டுமென்பதையும் பல்கலைகழக மாணவர்கள் குறிப்பிட வேண்டும்.

தமிழ் மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட நிலையில், இனப்படுகொலை விவகாரம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்புக்கூறல் விவகாரம் வெளியே எடுக்கப்பட்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு பாரப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் உள்ளடக்கப்பட வேண்டுமென பல்கலைகழக மாணவர்களிடம் சுட்டிக்காட்டி, இந்த விடயங்களை முன்கூட்டியே உங்களுடைய அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டால் எமது ஆதரவு இருக்குமென தெரிவித்திருந்தோம்.

ஆனால் இன்று வரை அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காமலிருக்கிறது.

தமிழ் மக்களிற்கு என்ன தேவையென வலியுறுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு, ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதியை முறியடிப்பதும் முக்கியம்.

மாணவர்கள் இந்த விடயங்களை வெளிப்படையாக அறிவிக்கா விட்டால் எமது ஆதரவு கிடையாது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டம் நடப்பதற்கு முன் நடந்த கலந்துரையாடலில், பேரணியின் நோக்கம் பற்றி எமக்கு சொல்லப்பட்ட விடயம், 2021 ஜனவரி தை மாதம் கட்சிகளும், பொஅமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிய கடிதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகத்தான் பேரணி நடக்குமென சொல்லப்பட்டது. ஆனால் பேரணியை  முடித்து வைத்த சுமந்திரனும்,  சாணக்கியனும் 10 அம்ச கோரிக்கையை இலங்கை அரசிடம் முன்வைப்பதாக. இந்த பேரணிக்கு அடுத்தடுத்த நாள் நாடாளுமன்றத்தில் பேசிய சுமந்திரன், இந்த பேரணியை தாங்கள் நடத்தியதாக கூறினார்.  10 அம்ச கோரிக்கையை அரசிடம் முன்வைத்து நடத்தியதாக கூறினார். பேரணிக்கு இன்று வரை உரிமைகோரும் யாரும் இந்த தகவல்களை மறுக்கவுமில்லை.  பேரணியை உரிமைகோருபவர்கள், 13வது திருத்தத்தை ஆதரிக்கும் தரப்பினரை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகவும், 13வது திருத்தத்தை நிராகரிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கொச்சைப்படுத்தும் விதமாகத்தான் செயற்படுகிறார்கள்.

தீவிரமான உணர்வாளர்களாகவும், தமிழ் தேசிய பற்றாளர்களாகவும் தமிழ் தேசத்திற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோருபவர்களையும் போல காட்டிக்கொண்டு, பாராளுமன்றத்தில் ஒற்றையாட்சி வாக்கெடுப்புகளிற்கு ஆதரித்து வாக்களிப்பதற்கு இடையூறு இல்லாத விதமாக நிகழ்ச்சி நிரல்களை நகர்த்தி வருகிறார்கள்.  அவர்கள்தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தை உரிமை கோரி வருகிறார்கள்.

இந்த தரப்பினரும், மாணவர் போராட்டத்தில் பங்காளிகள் போல தோற்றத்தை காண்பிக்கிறார்கள். 13வது திருத்தத்தை ஆதரிக்கும் கட்சிகள்தான் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதே சந்தேகமானது. இந்த சந்தேகங்களிற்கு மாணவர்கள் தெளிவை தர வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

வாங்கிய கடனில் இளைஞர்களின் எதிர்காலம் கட்டியெழுப்பப்படும்: நாடாளுமன்றத்தில் ரணில்!

Pagetamil

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி!

Pagetamil

‘இலங்கை இனி வங்குரோத்து நாடல்ல’: கடன் வாங்கிய பின் ரணில் அறிவிப்பு!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க சிபாரிசு செய்யவில்லை: சர்வதேச நாணய நிதியம்!

Pagetamil

கிரிமியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட ரஷ்யா கலிபர் ஏவுகணைகளை ஏற்றிய ரயில் அழிக்கப்பட்டது: உக்ரைன்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!