அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கையால், கடந்த சில நாட்ளாக அதானி குழும நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் சரிந்ததைத் தொடர்ந்து, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருந்து அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 3 வர்த்தக நாட்களில் தனிப்பட்ட சொத்து மதிப்பில் 34 பில்லியன் அமெரிக்க டெதலர்களை இழந்ததைத் தொடர்ந்து, தற்போது, 84.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் ப்ளூம்பெர்க் பில்லினியர் தரவரிசையில் 4வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அதானி.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வரும் கவுதம் அதானி கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இந்தநிலையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அண்மையில் அறிக்கை வெளியிட்டது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் “தங்கள் நிறுவனங்களின் பங்குமதிப்பு உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளன. மேலும், பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளன. அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தது. இதன் எதிரொலியாக, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்தன.
இதன் தொடர்ச்சியாக, ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், “அதானி குழுமத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது. எங்கள் சரிவிலிருந்து ஹிண்டன்பர்க் ஆதாயமடைய முயற்சிக்கிறது. இந்தத் தவறான அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பங்குச் சந்தையிலும் இந்த அறிக்கை பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது. ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் சரிவிலேயே வர்த்தகம் செய்யப்பட்டன. சென்செக்ஸ் புள்ளியில் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 10 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி 9.60 சதவீதமும், அதானி டிரான்ஸ்மிஷன் 8.62 சதவீதமும், அதானி வில்மர் 5 சதவீதமும், அதானி பவர் 4.98 சதவீதமும், என்டிடிவி 4.98% சதவீதமும் மற்றும் அதானி போர்ட்ஸ் 1.45 சதவீதமும் சரிந்திருந்தன.
தற்போது அதானி உலக கோடீஸ்வரர்கள் வரிசையில், பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ், கூகுள் இணை நிறுவனர்களான லாரி பேஜ், செர்ஜி பிரின் போன்றவர்களுக்குப் பின்னால் உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் 82.2 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் அதானியைத் தொடர்ந்து 12வது இடத்தில் உள்ளார்.
முன்னதாக, சொத்து மதிப்பில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சரிவு காரணமாக ‘ஃபோர்ப்ஸ்’ (Forbes) ரியல் டைம் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.