உயர்தரப் பரீட்சையின் போது தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாட்டில், உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரம் அவமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான உயர்தர பரீட்சை காலப்பகுதியில் தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவது தொடர்பில் கடந்த 25ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்ட கலந்துரையாடலில் இலங்கை மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியன தமது ஆணைக்குழுவில் சமரசம் செய்துகொண்டதாக நீதிமன்றில் தெரிவித்தது.
அந்தக் கலந்துரையாடலின் முடிவில், உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடலில் பங்குபற்றிய சகல பங்குதாரர்களும் சமரசம் செய்து கொண்டதையடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 26ஆம் திகதி முதல் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
கடந்த 26ம் திகதி மாலை 4.00 மணிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த உத்தரவை அமல்படுத்த தவறிவிட்டன.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம், “ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு எதிராக அல்லது அவமதிப்பு செய்த குற்றத்திற்காக” சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க கோரப்பட்டுள்ளது.