ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சரான நபா தாஸ், ஜார்சுகுடா மாவட்டம், பிரஜாராஜ் நகர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அமைச்சர் நபா கிஷோர் தாஸ் காரைவிட்டு இறங்கியபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர், அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். நான்கு முதல் ஐந்து முறை அவர் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சரிந்து கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது உள்ளூர் காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீதும் கோபால் தாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய கோபால் தாஸ் தப்பி ஓட முயலவில்லை என்றும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மேல் சிகிச்சைக்காக புபனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சொந்த பகை காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவதாக கோபால் தாசிடம் விசாரணை நடத்திய காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கோபால் தாசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்வர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நபா கிஷோர் தாஸ் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நபா கிஷோர் தாஸ் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ள முதல்வர், சம்பவம் குறித்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.