29.5 C
Jaffna
March 27, 2023
இந்தியா

பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 போர் விமானங்கள் விபத்து

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம் என்றும் இன்னொன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் என்பதும் பாதுகாப்புப் படையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விமானங்களும் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ பகுதியில் மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கிவிட்டப்பட்டுள்ளன. விபத்து நடந்த மொரீனா எனும் கிராமப் பகுதியில் நொறுங்கி விழுந்த விமானப் பாகங்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

விசாரணைக்கு உத்தரவு: இந்த விபத்து குறித்து இந்திய விமானப் படை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இரண்டு போர் விமானங்களும் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதா இல்லை வேறு காரணங்களால் விபத்து நடந்ததா என்று விரைவாக விசாரிக்கடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகோய் 30 விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பாராசூட் மூலம் பத்திரமாக இறங்கியதாகத் தெரிகிறது.

மிராஜ் 2000 போர் விமானத்தில் இருந்த ஒருவரை மட்டும் தேடும் பணி நடப்பதாகவும் விமானப் படை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு இந்திய விமானப் படைத் தளபதி விளக்கமாக விவரித்துள்ளார்.

சுகோய் 30 போர் விமானம்: இந்திய விமானப் படையில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சுகோய்-30 ரக விமானங்களை ரஷ்யா தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது இந்திய விமானப் படையில் 272 சுகோய்-30 எம்கேஐ ரக விமானங்கள் உள்ளன.

இந்த விமானங்களின் பாகங்கள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பெங்களூருவில் உள்ள பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) பொருத்தப்பட்டு விமானம் இயக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள எச்ஏஎல் நாசிக் மையத்திலும் சுகோய் விமான பாகங்களைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மிராஜ் 2000: மிராஜ் 2000 போர் விமானம் பிரான்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஃபேல் விமானத்திற்கு இணையானதாகும். இது மிக உயரத்தில் இருந்து லேசர் நுட்பத்தில் குண்டு வீசக் கூடியது. இது இந்த விமானத்தின் சிறப்புகளில் ஒன்று. 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய விமானப்படைக்கு இந்த விமானம் வந்தது. அப்போது பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து F16 ரக போர் விமானங்களை வாங்கியது. அதனால் அதைவிட சக்தி வாய்ந்த மிராஜ் 2000 ரக போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து இறக்குமதி செய்தது இந்தியா.

ராஜஸ்தானிலும் விபத்து: இதேபோல் ராஜஸ்தானின் பரத்பூரில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தின் விமானி தப்பியதாகத் தெரிகிறது. இது குறித்து மாவட்ட எஸ்.பி. ஷ்யாம் சிங் கூறுகையில், “பரத்பூரில் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனைச் சுற்றி பயங்கரமாக நெருப்பு எரிவதால் அது பாதுகாப்புப் படையைச் சேர்ந்ததா இல்லை தனியார் விமானமா என்று தெரியவில்லை. விமானத்திலிருந்து பைலட் தப்பியிருக்கலாம் என்றே கருதுகிறோம். அவரையும் தேடி வருகிறோம்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Pagetamil

நிகழ்ச்சிகளுக்காக லண்டன் சென்ற இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி

Pagetamil

ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட 8 ஆண்டுகள் தடை?

Pagetamil

‘நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்’: எம்.பி பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி

Pagetamil

நகை திருட்டு வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்: ஐஸ்வர்யா ரஜினிகாந்திடமும் விசாரணை நடத்த முடிவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!