சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதியுதவியளிக்கும் திட்டத்தை அங்கீகரிப்பதற்கு தேவையான கடன் உத்தரவாதத்தை பெறுவதற்கு, சீனா வழங்கிய இரண்டு வருட கால அவகாசம் போதுமானதாக இல்லை என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோளிட்டு ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கான பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் சபையின் அனுமதியைப் பெறுவதற்கு சீனாவிடமிருந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு மேலும் உத்தரவாதங்கள் தேவைப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM) இலங்கைக்கு கடன் நீட்டிப்பை வழங்கியுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு இந்த வாரம் தெரிவித்திருந்தது.
EXIM இலங்கைக்கு அதன் கடனை இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச நாணயம் இந்த சலுகையில் திருப்தி அடையவில்லை என்று உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோளிட்டு செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையின் கடன் தொடர்பான பிரச்சினை தொடர்பில் பரிஸ் கிளப் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையை மேலும் பொருளாதார மற்றும் நிதிச் சரிவில் இருந்து காப்பாற்றுவதற்காக, மேலும் 15 வருட கடன் மறுசீரமைப்புடன், நாட்டிற்கு 10 வருட கால அவகாசத்தை பரிந்துரைப்பதாக கடனாளி நாடுகளிடம் பாரிஸ் கிளப் கடந்த மாதம் கூறியிருந்தது.
இலங்கை முன்னேறுவதற்கான வழியை தெளிவுபடுத்துமாறு இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு ஏற்கனவே அறிவித்தது.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இலங்கைக்கான பாதையை தெளிவுபடுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகியவை இலங்கையின் முக்கிய கடன் வழங்கும் நாடுகளாகும்.