யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராச வீதி பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் மெக்கானிக் ஒருவர் அடித்தும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
கோப்பாய், இராச வீதியில், கல்வியியல் கல்லூரிக்கு அண்மையாக மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வந்த ரவீந்திரன் அஜித் (30) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு தனது மெக்கானிக் கடையில் தங்கியிருந்தவர், திடீரென வீட்டுக்கு புறப்பட்டு சென்ற போது இந்த சம்பவம் நடந்தது.
வீட்டுக்கு அருகிலுள்ள, சிறிய சந்தி பகுதியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவர் வாள்வெட்டு, கொட்டான்களால் தாக்கப்பட்ட நிலையில், காயத்துடன் வீட்டுக்கு தப்பியோடிச் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிள் வீதியோரமாக விழுந்து காணப்பட்டது.
சுமார் 150 மீற்றர்கள் தொலைவிலுள்ள வீட்டுக்கு தப்பியோடி வந்தவர், வீட்டின் முன்பகுதியில் உட்கார்ந்துள்ளார். தாக்கப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.
உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்த சமயத்தில் வீட்டில் மனைவி, மனைவியின் பெற்றோர், மனைவியின் சகோதரர்கள் இருவர் இருந்தனர். அஜித்தின் 5 வயது பிள்ளை தூக்கத்தில் இருந்துள்ளது.
அப்போது வீதியில் வாகன சத்தம் கேட்டதாகவும், நோயாளர் காவு வண்டி வருவதாக தாம் நினைத்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
எனினும், முகத்தை கருப்பு துணியால் மூடிக்கட்டியபடி, ஹெல்மெட் அணிந்தபடி 4 பேர் வந்ததாகவும், காயமடைந்த அஜித்துடன் உட்கார்ந்திருந்த குடும்பத்தினரை அங்கிருந்து ஓடும்படி எச்சரித்ததாகவும் குறிப்பிட்டனர்.
அங்கிருந்து செல்லாவிட்டால், குடும்பத்தினரையும் வெட்டப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, குடும்பத்தினர் வீட்டு வளவை விட்டு வெளியே ஓடிச்சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
தாம் வீட்டு வளவை விட்டு வெளியேறிய பின்னர், ஒரு அலறல் சத்தம் கேட்டதாகவும், திரும்பி வந்து பார்த்த போது, அஜித் இரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அஜித் காதல் திருமணம் புரிந்தவர். தம்பதியினருக்கு 5 வயதில் பிள்ளை உள்ளது. எனினும், குடும்பத்தினரை அவர் தாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்திற்குள் சுமுகமான சூழல் நிலவவில்லையென குறிப்பிடப்படுகிறது.
அனேகமாக தனது மெக்கானிக் கடையிலேயே தங்கியிருந்துள்ளார்.
இதேவேளை, தனக்கு வெளியார் சிலரால் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு, அஜித் கடந்த சில மாதங்களாக வாள் ஒன்றை பாதுகாப்பிற்காக வைத்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. வெளியில் செல்லும் போது, மோட்டார் சைக்கிளிற்குள் வாளையும் எடுத்துச் செல்வதாக அவரை தெரிந்தவர்கள் குறிப்பிட்டனர்.
நேற்று கொலை சம்பவம் நடந்த இடத்தில் வாள் எதுவும் காணப்படவில்லை. வீட்டிற்கு அண்மையில் அவர் மீது முதல் முறை தாக்குதல் நடந்த இடத்திலும், அங்கு விழுந்துள்ள அவரது மோட்டார் சைக்கிளிற்குள்ளும் வாள் காணப்படவில்லை. அவர் வாள் கொண்டு வரவில்லையா அல்லது அவர் கொண்டு வந்த வாளை கொலையாளிகள் எடுத்துச் சென்றனரா என்பது இதுவரை தெரியவில்லை.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள ஆவா, தனுரொக் போன்ற வாள்வெட்டுக் குழுக்கள் இந்த குற்றத்தில் தொடர்புபடாமல், வேறு ஒரு தரப்பு இந்த குற்றத்தில் பங்கேற்றிருக்கலாமென பொலிசார் நம்புகிறார்கள்.
இதேவேளை உயிரிழந்த இளைஞன், மோட்டார் சைக்கிள்களை வடிவம் மாற்றி உருவாக்கியுள்ளார். இது தொடர்பில் அவரை உள்ளூர் யூரியூபர்கள் சிலர் பேட்டியெடுத்தும் ஒளிபரப்பியுள்ளனர்.