உள்ளூராட்சி தேர்தலிற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. தேர்தல் பந்தயத்தில் முதலாவது சிறு தடைதாண்டல் இது. வேட்புமனுவை முறையாக தாக்கல் செய்து, போட்டியில் தம்டை உறுதி செய்ய வேண்டும். பெரும்பாலான கட்சிகள் அதை முறையாக செய்தன. சில கட்சிகள் சறுக்கி விட்டன. இதனால், தேர்தல் களத்தில் குதிக்க காத்திருந்த சிலருக்கு ஏமாற்றம்.
பிரதான தமிழ் தேசிய கட்சிகள் என பார்த்தால், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வேட்புமனுக்களே அதிகளவில் நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் அந்த அணியில் நிச்சயம் அதிருப்தியடைந்திருப்பார்கள். புதிதாக அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கும் யாருமே செய்யக்கூடாத தவறை அவர்கள் செய்துள்ளனர். முதற்கோணல் முற்றும் கோணலாகுமா என்பதை அறிய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர்- அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பதை பற்றிய பல தகவல்களை குறிப்பிட்டிருந்தோம். வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களையும் வாசகர்களிற்காக குறிப்பிட வேண்டும்.
இந்த சம்பவம் எந்தக் கட்சிக்குள் நடந்தது என்பதை நாம் குறிப்பிடப்போவதில்லை. இருந்தாலும், கூர்மையான வாசகர்களால் கட்சியையும், நபர்களையும் அடையாளம் காண முடியும்.
யாழ் மாநகரசபை வேட்பாளர் தெரிவின் போது நடந்த சம்பவம் இது.
அவர் ஒரு சட்டத்தரணி. சாதாரண சட்டத்தரணியல்ல- தமிழ் தேசிய சட்டத்தரணி. சட்டத்துறையில் கில்லாடி. நல்ல பேச்சாளர். யாழ் மாநகரசபையில் இம்முறை கொடியேற்றுகிறோம் என, எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.
படு ஜோராக தேர்தலிற்காக தயாராகி விட்டார். மாநகரசபைக்கான வேட்பாளர்கள் கைநிறைய இருக்கிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.
வேட்பாளர்களை கட்சிக்காரியாலயத்திற்கு அழைத்து, வேட்புமனு பூர்த்தி செய்யும் பணி ஆரம்பமாகி விட்டது.
சில இளைஞர்கள் வந்திறங்கியுள்ளார்கள். தலையில் நிறப்பூச்சு பூசியவர்கள், கொண்டை கட்டியவர்கள், தோடு குத்தியவர்கள் என வந்திறங்கிய இளைஞர்களை பார்த்த ஏனையவர்களிற்கு அதிர்ச்சி.
“இதென்ன தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப் போகிறோமா? வில்லன் கோஸ்டியுடன் சண்டைக்காட்சி வைத்து சினிமா சூட்டிங் நடத்தப் போகிறோமா? என மற்றையவர்கள் குழம்பியபடியிருந்தனர்.
சட்டத்தரணி எழுந்து சென்று, ‘come on babys’ என அவர்களை வரவேற்றார். அவர்களின் முதுகை தட்டிக்கொடுத்த சட்டத்தரணி, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். அப்போது, தனக்கு அருகில் வந்த இளைஞனை பார்த்து, “உமக்கு அடுத்த தவணை எப்போது?“ என கேட்டார்.
அப்போதுததான், அங்கிருந்தவர்களிற்கு விடயம் புரிந்தது.
தன்னிடம் வழக்கு விசாரணைக்காக வந்த வாடிக்கையாளர்களை வைத்து வேட்பாளர் பட்டியலை நிரப்புகிறார் என்பது.
அவர்களை வைத்து நிரப்பியும் பட்டியல் நிரம்பவில்லை. ஒரு இளைஞனை பார்த்து, “எமது வைஃப் எங்கு நிற்கிறார்?“ என கேட்டார்.
வீட்டில் நிற்பதாக கூறினார்.
“ப்ளீஸ்… ஒருமுறை அவரையும் அழைத்து வாரும்“ என்றார். அவரும் அழைத்து வரப்பட்டு, வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார்.
அப்படியிருந்தும், பட்டியல் நிரம்பவில்லை.
அங்கிருந்த மற்றொரு கட்சி உறுப்பினரிடம் இருவரை அழைத்து வருமாறு கூறினார்கள். அவர் சென்று, தனது தாயாரையும், மாமியாரையும் அழைத்து வந்து, வேட்பாளர் பட்டியலை நிரப்பினார்.
அப்படியிருந்தும், பட்டியல் நிரம்பவில்லை. இன்னும், ஒரேயொரு வெற்றிடம் இருந்தது. பக்கத்தில் இருந்த கட்சி செயலாளர், தனது அடையாள அட்டையை கொடுத்து, தனது பெயரையும் இணைத்து, பட்டியலை நிரப்பச் சொன்னார்.
ஒரு வழியாக பட்டியல் நிரம்பி விட்டது.
யாழ் மாநகரசபையில் வட்டார உறுப்பினர்கள், தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் என 45 பேர் தெரிவாகுவார்கள். சிறிய கட்சிகளால் 45 வெற்றி வேட்பாளர்கள் அல்லது தகுதியான வேட்பாளர்களை நியமிப்பது சாத்தியமில்லையென்பது உண்மை. அதனால் வெற்றிச் சாத்தியமுள்ள சில வேட்பாளர்களை நிறுத்தி, டம்மி வேட்பாளர்களால் பட்டியலை நிரப்புவார்கள். இது சகஜம் தான்.
ஆனால், பிரதான தமிழ் தேசிய கட்சியொன்றின் நிலையே இதுவென்றால், அவர்களின் செயற்திறன் குறித்த சந்தேகம் எழுவது இயல்பானதுதானே.
முக்கியமான விடயம், செய்தியில் இணைக்கப்பட்ட புகைப்படத்திற்கும், செய்திக்கும் தொடர்பில்லை. புத்தளம் மாவட்ட செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வேட்புமனுக்களை சிலர் பார்வையிடும் புகைப்படம் அது.