25.5 C
Jaffna
January 29, 2023
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் பெரும் பிளவு: ஓரங்கட்டப்படும் மாவை அணி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைகிறது!

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் உருவாகியுள்ள குழு வாதத்தினால் புறமொதுக்கப்பட்ட நீண்டகாவ கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் அதிருப்தியடைந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து வருகிறார்கள்.

தமிழ் அரசு கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளர்கள் பலர் கடந்த சில தினங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ளனர். தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களாக உள்ளவர்கள் முதல் இராணுவ நெருக்குவார காலகட்டத்தில் கட்சிப்பணியாற்றியவர்கள் வரை பலர் தமிழ் அரசு கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.

எம்.ஏ.சுமந்திரன் அணியினரால் புறமொதுக்கப்பட்ட பலரே இவ்வாறு வெளியேறியுள்ளனர். கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் நெருக்கமாக இருந்தார்கள் என்ற காரணத்தினாலேயே அவர்கள் புறமொதுக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் வரலாற்றில் என்றுமில்லாத உட்கட்சி மோதலும், பிளவும் ஏற்பட்டுள்ளது. தமிழ் அரசு கட்சிக்குள் முன்னர் எம்.ஏ.சுமந்திரன் அணியென ஒரு அணி செயற்பட்டது. இப்பொழுது நிலைமை மாறி விட்டது. தமிழ் அரசு கட்சியின் பெரும்பகுதி சுமந்திரன் அணியாகி விட்டது. மாவை சேனாதிராசாவுடன் நெருக்கமாக இருந்த பல மூத்த தலைவர்களிற்கு பல்வேறு தூண்டில்களை போட்டு, வளைத்துப் பிடிக்கப்பட்டனர். இப்போது தமிழ் அரசு கட்சிக்குள் மாவை அணியென்ற சிறிய குழுதான் உள்ளது.

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களான சிறிய தொகை இளைஞர்கள்தான் மாவை சேனாதிராசாவுடன் இருந்தார்கள். அவர்கள் அனேகமாக கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்கள். இராணுவ நெருக்குவார காலகட்டத்திலும் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தவர்கள்.

இவர்களில் பலர் இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ளனர். எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பகுதிகளிலேயே இந்த புறமொதுக்கல் நிகழ்வதாக கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தென்மராட்சி பகுதியில் மாவை சேனாதிராசாவின் ஆதரவாளர்கள் புறமொதுக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து, மாவை சேனாதிராசா தலையிட்டும் கூட, தனது ஒரு ஆதரவாளரிற்கும் ஆசனத்தை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

மாறாக, வலிவடக்கில் தனது ஆதரவாளர் ஒருவர் வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்படவில்லையென்றதும், நேற்று முன்தினம் மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று, அந்த உறுப்பினரை இணைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வகையான செயற்பாடுகளால் அதிருப்தியடைந்த கட்சியின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து வருகிறார்கள்.

இப்படி இணைந்தவர்கள் தொடர்பான பட்டியலொன்றை தமிழ்பக்கம் பெற்றது.

இலங்கை தமிழ்அரசு கட்சியின் மிக முக்கிய பிரமுகர்கள் சிலர் தற்போதைக்கு மௌனமாக இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பிரச்சார பணியில் ஈடுபட தீர்மானித்துள்ளதையும் தமிழ்பக்கம் நம்பகரமாக அறிகிறது.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் கிளிநொச்சி மாவட்டத்திலும் குழப்பங்கள் நிலவுகிறது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் ஒருவரின் பின்னணியில், சுயேட்சைக்குழுவொன்றும் அங்கு களமிறக்கப்பட்டது. இதற்கான கட்டுப்பணத்தை குறிப்பிட்ட அரசியல் பிரமுகரே, தனது உதவியாளரான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஒருவர் ஊடாக அனுப்பி வைத்ததை தமிழ்பக்கம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்!

Pagetamil

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழ் அரசு கட்சி இனி இணைந்தாலும் சின்னம் குத்துவிளக்கே!

Pagetamil

இலங்கைக்கு சீனா வழங்கிய 2 வருட அவகாசம் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை!

Pagetamil

இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றத்தில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி!

Pagetamil

சர்வகட்சி கூட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!