வலி வடக்கில் காணி அபகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் விலகிக் கொண்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிவடக்கில் பாதுகாப்பு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் சொந்தக்காரர்கள் சுமார் 1,500 பேர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் ஒருவர்.
இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவொன்று முன்னிலையாகி வந்தது.
இந்த வழக்கில் இனி முன்னிலையாக மாட்டேன் என கனகஈஸ்வரன் அறிவித்துள்ளார். தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடந்த போது, தலைமையுரையாற்றிய மாவை சேனாதிராசா இதனை தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் அரசியலமைப்பு சார்ந்த அனேக வழக்குகளில் கனகஈஸ்வரன் முன்னிலையாகி வந்திருந்தார். அவரது விலகலை கவலையுடன் மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.
இதன்போது, கட்சிக்குள் ஒழுங்கில்லாததாலேயே இந்த நிலைமையேற்பட்டதாக சிலர் சுட்டிக்காட்டினர். ஒவ்வொருவர் ஒவ்வொரு அறிக்கை விடுவதாலேயே இந்த நிலைமையென தெரிவித்த செயலாளர் சத்தியலிங்கம், இதனை கட்டுப்படுத்த வேண்டுமென்றார்.
அப்பொழுது எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்த போது, சட்டத்தரணி தவராசாவின் அறிக்கை வெளியான பின்னர், சட்டத்தரணி கனகஈஸ்வரன் என்னிடம் கேட்டார், “நீ இனியும் கட்சியில் இருக்கப் போகிறாரா?“ என. நீங்கள்தானே என்னை கட்சிக்கு கொண்டு வந்தீர்கள். ஏன் இப்படி சொல்கிறீர்கள் என கேட்டேன் என்றார்.