நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜப்பான் அணி. அதனால், எப்பொழுதும் கோப்பையை வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்றாக கருதப்படும் ஜேர்மனி, முதல் சுற்றோடு நடையை கட்டியுள்ளது.
அடுத்தடுத்து அதிர்ச்சிகளை காணும் இந்த உலகக்கோப்பையில் இது இறுதியாக நடந்துள்ள அதிர்ச்சியாகும்.
குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் தங்களது கடைசி குரூப் போட்டியில் நேற்று இரவு கலீபா சர்வதேச மைதானத்தில் விளையாடின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஜப்பான் அணிக்கு இருந்தது. இந்த போட்டியின் முதல் பாதியில் ஸ்பெயின் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
ஆனால், இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வெறும் 2.22 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தியது ஜப்பான். முதல் கோலை ரிட்சு டோன் அடித்தார். இரண்டாவதாக ஏஓ டனகா.அடித்த கோல் ‘அவே’ லைனை கடந்தது போல இருந்தது. அதை வீடியோ மூலம் பார்த்து கோல் என்று உறுதி செய்தார் நடுவர். ஆனாலும் ரசிகர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதன் பிறகு ஸ்பெயின் அணியின் முயற்சிகள் அனைத்தும் வீணானது.
இந்த போட்டியை ஸ்பெயின் சமன் செய்திருந்தால் இதே பிரிவில் உள்ள ஜெர்மனி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கும். அது நடக்காத காரணத்தால் அந்த அணி வெளியேறி உள்ளது.
குரூப் இ பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது.
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் 2-1 என கோஸ்டாரிகா முன்னிலையில் இருந்தது. எனினும், இறுதியில் ஜெர்மனி வெற்றியீட்டியது.
என்றாலும், இந்த வெற்றி அவர்களை அடுத்த சுற்றிற்கு அழைத்துச் செல்லவில்லை.
குரூப் ‘இ’ பிரிவில் முதலிடம் பிடித்த ஜப்பான் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த ஸ்பெயின் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஸ்பெயின் அணி அதிக கோல்கள் பதிவு செய்த காரணத்தால் ரவுண்ட் ஒப் 16க்கு முன்னேறியுள்ள. கோஸ்டாரிக்கா 2 போட்டிகளில் தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது.
ஜெர்மனியின் கோல் கீப்பர் மனுவல் நியூயர் தனது 19வது உலகக் கோப்பை ஆட்டத்தை விளையாடி, செப் மேயர் மற்றும் டஃபரெல் ஆகியோரை கடந்து, அதிக உலகக்கோப்பை ஆட்டங்களில் விளையாடிய கோல்கீப்பர் என்ற சாதனையைக்கு சொந்தக்காரர் ஆனார்.