வங்கி மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும், இத் துறைகளில் இணைய விரும்புவோருக்கும் அடிப்படை அறிவினையும், அங்கீகரிக்கபட்ட தராதரத்தையும் வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்படுகின்ற இந்த டிப்ளோமா கற்கை நெறியின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு எதிர்வரும் டிசெம்பர் 03 ஆம் திகதி, சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவிருக்கிறது.
இந்தக் கற்கை நெறியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் ஊடாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம் மேற்கொண்டுள்ளது.
கற்கை நெறிக்கான விரிவுரைகளை நடாத்துவதற்காக துறைசார் அனுபவம் மிக்க விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வங்கித்துறையில் நீண்ட கால அனுபவம் உள்ள வருகைதரு விரிவுரையாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறுமட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் அனுபவம் வாய்ந்த தொழில்சார் வல்லுனர்களின் பின்னூட்டல் ஆலோசனைகள் சிபாரிசுகளின் அடிப்படையில் இந்தக் கற்கை நெறிக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, பல்கலைக்கழக மூதவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.