ஹட்டன் ஸ்ரீ பாத தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயின்ற மாணவன் ஒருவர், 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி 9 ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளார்.
ஹட்டன் வில்பிரட்புரவில் வசிக்கும் பொரல லியனகே உஜித சித்திரமல் இரஞ்சின் (16) என்பவரே இந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.
இந்த மாணவன், எட்டு வருடங்களாக அவுஸ்திரேலியாவில் கல்வி கற்று 2016 ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார். கினிகத்தேனை மத்திய கல்லூரியில் இணைந்து, தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளுடன் சித்தியடைந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இம்மாணவன் 9ஆம் தரத்திலிருந்து 10ஆம் தரத்தின் முதல் காலாண்டு வரை ஸ்ரீ பாத தேசிய பாடசாலையில் கல்வி கற்றிருந்த போதிலும், க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவதற்காக முன்னதாகவே பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.
2021 க.பொத.த சாதாரணதர பரீட்சையில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக விண்ணப்பித்தார்.
உஜித சித்திரமல் இரஞ்சின், தனது தந்தை கணித ஆசிரியர் எனவும், தனது தாயார் ஹட்டன் கேப்ரியல் கல்லூரியில் ஆங்கில ஆசிரியை எனவும் தெரிவித்தார். தனக்கு ஒரு மூத்த சகோதரியும் இருப்பதாக அவர் கூறினார்.
மூத்த சகோதரி 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்.
“நான் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற விரும்புவதாக எனது பெற்றோரிடம் கூறினேன். அரச பாடசாலையில் படிக்கும் மாணவன், தனிப்பட்ட பரீட்சார்த்தியாக தோற்ற முடியாததால், பாடசாலையை விட்டு வெளியேறி, க.பொ.த. சாதாரண தரம் சார்ந்த அனைத்து பாடத்திட்டங்களையும் முழுமையாகப் படித்தேன்.
இதற்கு எனது ஆசிரியர்கள், எனது பெற்றோர் மற்றும் சகோதரியிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றேன். எனது அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் உறுதியின் காரணமாக எனது தந்தை மற்றும் அம்மா எனக்கு அதிகபட்ச ஆதரவை வழங்கினர்.
நான் பாடசாலை மாணவனாக தோற்றவிருந்த 2022 க.பொ.த OL பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன்னர், நான் தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்து 2021 பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தேன். அர்ப்பணிப்பும், ஆர்வமும், உறுதியும் இருந்தால், இதை எளிதாகச் செய்யலாம். பயோ ஸ்ட்ரீமில் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகி வருகிறேன். வைத்தியராக வருவேன் என்று நம்புகிறேன்“ என்றார்.
தானும் தனது கணவரும் ஆசிரியர்கள் எனவும், தற்போது தனது கணவர் ஆசிரியர் தொழிலை விட்டு விலகி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மாணவியின் தாயார் இந்திகா சுதர்ஷனி தெரிவித்துள்ளார்.