கட்டார் உலகக்கோப்பையில் குரூப் டி இல் இருந்து நொக் அவுட் சுற்றிற்கு பிரான்ஸ், அவுஸ்திரேலிய அணிகள் தெரிவாகியுள்ளன.
இன்று நடந்த குழு நிலை ஆட்டங்களில் துனிசியா 1-0 என பிரான்ஸை வீழ்த்தி அற்புதமான வெற்றியீட்டியது. எனினும், மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க்கை 1-0 என அவுஸ்திரேலியா வீழ்த்தியதன் மூலம், மற்றொரு அணியாக அவுஸ்திரேலியா நொக் அவுட் சுற்றிற்கு முன்னேறியது. இந்த சுற்றிற்கு பிரான்ஸ் ஏற்கெனவே தகுதி பெற்று விட்டது.
எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த பிரான்ஸிற்கு எதிரான ஆட்டத்தில் துனிசியா 1-0 என வெற்றியீட்டியது. அந்த அரங்கம் துனிசியா ரசிகர்களினால் நிறைந்திருந்தது. அந்த வெற்றியின் மூலம், துனிசியா நொக் அவுட் சுற்றிற்கு முன்னேறும் என அணியினரும், ரசிகர்களும் பேரானந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
வெறும் 2 நிமிடங்களில் அது துயரமாக மாறியது. காரணம், நகரின் மறுபுறத்தில், அல் ஜனூப் ஸ்டேடியத்தில் டெமார்க்-ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான ஆட்டம் அப்போதுதான் முடிந்தது. அவுஸ்திரேலியாவின் மாத்யூ லெக்கி ஒரு கோல் அடிக்க, 1-0 என டென்மார்க்கை வீழ்த்தி, நொக் அவுட் சுற்றிற்கு தகுதி பெற்றது.
பிரான்ஸ் ஏற்கனவே நொக் அவுட் சுற்றில் தங்களுடைய இடத்தை உறுதி செய்துள்ள நிலையில், துனிசியாவிற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மாற்று வீரர்களிற்கே சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. அதாவது, பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் அணியில் ஒன்பது மாற்றங்களைச் செய்தார்.
துனிசியாவின் வஹ்பி கஸ்ரி 58வது நிமிடத்தில் கோல் அடித்தார். இவர் பிரான்சில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆட்டத்தில் துனிசியாவின் கைஓங்கியிருந்ததையடுத்து, இறுதிக்கட்டத்தில் நட்சத்திர வீரர்கள் Kylian Mbappe, Griezmann மற்றும் Ousmane Dembele ஆகியோர் களமிறக்கப்பட்ட போதும், பிரான்சிற்கு பலன் கிட்டவில்லை.
டி பிரிவில் பிரான்ஸ் முதலிடம் பிடித்தது. அவுஸ்திரேலியா இரண்டாமிடம் பிடித்தது.