ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை 4 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.
ஆப்பான அணி தோல்வியடைந்தாலும், அந்த அணியின் 20 வயது தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரானின் காவிய சதம் நிலைத்து நிற்கும்.
நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்கம் மோசமானதாக இருந்தாலும், அந்த அணியின் தொடக்க வீரரான 20 வயதான இப்ராஹிம் சத்ரானின் காவிய சதமும், அவருடன் மிகப்பெரிய பார்ட்னர்சிப் அமைத்த நஜிபுல்லா சத்ரனின் அரைச்சதமும் ஆப்கானை மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவியது.
14.1 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட் இழந்து 57 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது. அப்பொழுது போட்டி முழுமையாக இலங்கை வசம் இருப்பதாக தோன்றியது.
ஆனால், இப்ராஹிம் சத்ரன் , நஜிபுல்லா சத்ரன் இணை 141 பந்துகளில் 154 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
4வது விக்கெட்டாக நஜிபுல்லா சத்ரன் 37.4 ஓவர்களில் அணி 211 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். அவர் 76 பந்துகளில் 77 ஓட்டங்களை பெற்றார்.
இன்றைய ஆட்டத்தின் முத்தாய்ப்பு, இப்ராஹிம் சத்ரன் சதம். அவர் 138 பந்துகளில் 162 ஓட்டங்களை பெற்றார். 15பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசினார்.
ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் ஒருநாள் போட்டியில் பெற்ற அதிகபட்ச ஓட்டம் இதுதான். முன்னதாக 2015 ஆம் ஆண்டில் முகமது ஷாஜாத் சிம்பாவேக்கு எதிராக 131 ஓட்டங்களை பெற்றிருந்ததே, ஆப்கான் வீரர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டமாக இருந்தது.
கடைசி 10 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 87 ரன்கள் எடுத்தது – இப்ராஹிம் அந்த ரன்களில் 56 ரன்கள் எடுத்தார். அவர் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் இன்னிங்ஸின் இறுதிப் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
இப்ராஹிம் சத்ரன் இதுவரை 8 ஒருநாள் ஆட்டங்களில் ஆடி, 3 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த ஆப்கான் வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
இப்ராஹிம் சத்ரன் ஏற்கனவே 8 ஒருநாள் போட்டிகளில் 433 ரன்களை குவித்துள்ளார். அவரது துடுப்பாட்ட சராசரியாக 61.85. அவரது ஐம்பது பிளஸ் ஸ்கோர்கள் ஒவ்வொன்றையும் சதங்களாக மாற்றியுள்ளார்.. இப்போது அவர் தனது கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்றில் சதம் அடித்துள்ளார்.
ஆப்கான் தரப்பில் 3வது அதிகபட்ச ஓட்டம் பெற்றவர் ரஹ்மத் ஷா. 22 ஓட்டங்கள். ஆப்கான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்களை குவித்தது.
ஆப்கான் அணியின் துடுப்பாட்ட சாதனைகளை பார்த்த போதே, இலங்கையின் பந்துவீச்சு தரம் தெரிய வந்திருக்கும். அதைப்பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. எப்பொழுதும் போல கிளப் மட்ட போட்டி தர பந்துவீச்சுத்தான்.

இலங்கையின் ஏழு பந்துவீச்சாளர்களில் இருவரைத் தவிர மற்ற அனைவரும் ஒரு ஓவருக்கு ஆறு அல்லது அதற்கு மேல் ஓட்டங்களை வாரி வழங்கினர். புது மாப்பிள்ளை கசுன் ராஜித 10 ஓட்டங்களில் இருந்து 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வனிந்து ஹசரங்க 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 314 என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. குசல் மென்டிஸ், பதும் நிசங்க ஜோடி ஆட்டத்தை தொடங்கியது. சில நாட்களின் முன் திருமணம் முடித்த பின் கிரிக்கெட் ஆடினார் பதும். மனைவி கிரிக்கெட்டை பார்ப்பாரோ என்ற பதற்றமோ என்னவோ, 300 பிளஸ் ரன்களை விரட்டும் விவஸ்தையே அவரது ஆட்டத்தில் தெரியவில்லை. 55 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்றார். குசல் மென்டிஸ் 61 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றார். இருவரும் முதலாவது விக்கெட்டிற்கு 18 ஓவர்களில் 101 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தனர்.
தினேஸ் சந்திமல் 33, தனஞ்ஜய டி சில்வா 5 என விக்கெட்டுக்கள் வீழ்ந்தது. இலங்கை விக்கெட்டுக்களை காப்பாற்றினாலும், தேவையான ஓட்ட விகிதம் எகிறிக்கொண்டே சென்றது. மந்தமாக வீரர்கள் ஆடினர்.
5வது விக்கெட்டிற்கு சரித் அசலங்க, கப்டன் தசுன் சானக இணைந்து சற்று வேகமாக ஆடினர். இருவரும் 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். 43 ரன்களுடன் தசுன் சானக, ரஷித் கான் பந்தில் போல்ட்டானர்.
சரித் அசலங்க மட்டுமே இலங்கை தரப்பில் அதிக பட்ச ஓட்டங்களை பெற்றார். எனினும், தனியொருவராக ஆட்டத்தை திசைதிருப்பி, அணியை வெற்றிபெற வைக்கும் திறன் அவரிடமிருக்கவில்லை. இறுதிக்கட்டத்தில் அவர் மட்டையை சுற்றினார். சில பவுண்டர்கள் சென்றன. எனினும், இறுதிக்கட்டத்தில் இலக்கை விரட்டும் வேகமும், விறுவிறுப்பும் இருக்கவில்லை. தேவையான ரன்ரேட்டும் இருக்கவில்லை. ஒருபக்கம் விக்கெட்டுக்கள் விழ, அசலங்க நிலைத்து நிற்கிறார். ஆனால், ஆட்டத்தை கையில் எடுத்திருக்க வேண்டிய அசலங்க, கடைசி ஓவர்களில் சிங்கிள் எடுத்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்.
பொறுத்துப் பொறுத்து பார்த்த பின்வரிசை வீரர் துனித் வெல்லலகே, மட்டையை சுழற்ற ஆரம்பித்தார். 48வது ஓவரின் கடைசிப்பந்தில் ஆரம்பித்தார். 50 வது ஓவரின் முதல் பந்து வரை பவுண்டரியும் சிக்சரும் விளாசி, ஆட்டத்தை இலங்கை பக்கம் திருப்பினார்.
49வது ஓவரின் 4வது பந்தில் அசலங்க சிக்சர் அடித்தார். இலங்கை 314 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்.
4 விக்கெட்டால் வெற்றியீட்டியது.
அசலங்க 72 பந்தில் 83 ஓட்டங்களும், துனித் வெல்லலகே 21 பந்தில் 31 ஓட்டங்களும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ரஷித் கான் 37 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் முடிந்தது.
சரித் அசலங்கவும் திருமணத்தின் பின் ஆடிய முதலாவது சர்வதேச போட்டி. தம்பதியின் மனதில் நிலைத்து நிற்கும் அருமையான திருமண பரிசை அளித்துள்ளார்.