10ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து, வீடியோ படம் பிடித்து வைத்து, தொடர் பலாத்காரம் செய்து வந்த சக மாணவர்கள் 5 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐதராபாத் புறநகர் பகுதியான ஹயத்நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஓகஸ்ட் மாதம் நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்தது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 சிறார்களை ஹயத்நகர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஹயத்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தட்டி அன்னாரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 5 சிறுவர்கள் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியுள்ளனர். 17 வயதான சக மாணவியொருவர் அவர்களுடன் நெருக்கமான நட்பில் இருந்துள்ளார். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முடிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இல்லாத நிலையில், இந்த ஐந்து சிறுவர்களும் அவரது வீட்டிற்குள் புகுந்தனர். மாணவி மிரட்டப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூரத்தை குற்றவாளிகளில் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இதை யாரிடமாவது சொன்னால் சமூக வலைதளங்களில் வைரலாக்குவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறவில்லை.
பத்து நாட்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவருக்கு வீடியோவைக் காட்டி அவரை மிரட்டினார். மீண்டும் பலாத்காரம் செய்து அதை செல்போனில் பதிவு செய்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை மற்ற நால்வருக்கும் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன்னை பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்வதால் பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹயத்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மீதும் ஐடி சட்டத்தின் பிரிவு 67A மற்றும் 67B மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் ஆபாச வீடியோவை படம்பிடித்து அனுப்பியதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்த போலீசார், 24 மணி நேரத்தில் 5 சிறார் குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர் சிறுவர் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை யாரும் அனுப்ப வேண்டாம் என ரச்சகொண்டா போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்தவர்கள் காவல்துறையில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேண்டுமென்றே சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் அனுப்பினால் போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.