சீனாவுடனான நாட்டின் ‘பொற்காலம்’ முடிந்துவிட்டதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறிய ஒரு நாள் கழித்து, புதிய சைஸ்வெல் சி அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் இருந்து சீன நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது.
சீன அரசிற்கு சொந்தமான சீனா ஜெனரல் நியூக்ளியர் (CGN) எரிசக்தி நிறுவனமான இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அதற்கு பதிலாக பிரெஞ்சு நிறுவனமாக EDF இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது என இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்தது.
அறிவிப்புக்குப் பிறகு, சீனத் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, “ஒரு கொள்கையாக, சீன வணிகங்களுக்கு எதிரான எந்தவொரு பாரபட்சமான நடைமுறைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இங்கிலாந்தில் உள்ள சீன நிறுவனங்களுக்கு இங்கிலாந்து தரப்பு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற சூழலை வழங்கும் என்று நம்பப்படுகிறது.” என தெரிவித்தது.
இந்த ஆலை தற்போது கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சஃபோல்க் கடற்கரையில் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு ஐரோப்பிய அழுத்த உலைகளுடன் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அது தோராயமாக இங்கிலாந்தில் ஆறு மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும். இந்த ஆலையின் செயல்பாட்டின் மூலம் நாட்டில் 10,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுனக்கின் கருத்துக்கள் மற்றும் ஷாங்காயில் கோவிட் போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிக்கும் பிபிசி பத்திரிகையாளர் தாக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிரதமர் சுனக் நேற்று தெரிவிக்கையில், சீனாவுடனான ‘பொற்காலம்’ என்று அழைக்கப்படும் காலம் முடிந்துவிட்டது என்றார்.
உலக விவகாரங்களில் – உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை அல்லது காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பலர் இதை புரிந்துகொள்கிறார்கள் என்றார்.
முன்னதாக, ஷாங்காயில் கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து நடக்கும் போராட்டங்களில் செய்தி சேகரிக்கும் போது பிபிசி பத்திரிகையாளர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, சீனாவை இங்கிலாந்து கண்டித்திருந்தது.