29.8 C
Jaffna
March 29, 2024
இந்தியா

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மோசமான படமா?: இஸ்ரேலிய படைப்பாளி பற்றவைத்த நெருப்புக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்

கடந்த1989-1990களில் காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது குறித்தும், அங்கு நடந்த படுகொலைகள் குறித்தும் பேசும் விதத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியால் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தப் படம் வெளியானபோது சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிப்பது, படத்தை பார்க்க அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அரை நாள் விடுப்பு அளிப்பது என்று பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. இந்தப் படம் குறித்த சர்ச்சை நாடாளுமன்றத்தில் கூட எதிரொலித்தது.

இந்நிலையில், இப்போது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட போட்டி தேர்வுக் குழு தலைவர் நடாவ் லேபிட் பற்றவைத்த நெருப்பு, இந்தப் படம் பற்றிய இரண்டாம் சுற்று சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

என்ன பேசினார் லேபிட்?

கோவா திரைப்பட விழா நேற்று (நவ.28) நிறைவுபெற்ற நிலையில், நிறைவு விழாவில் இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் பேசும்போது, “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

சிவசேனா ஆதரவு: லேபிடின் இந்தக் கருத்து குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், இது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பற்றி சரியான விமர்சனம்தான். ஒரு கட்சிக்கு எதிராக இன்னொரு கட்சி இந்தப் படத்தை வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ஓர் அரசாங்கமும், ஒரு கட்சியும் இதைவைத்து விளம்பரம் தேடுவதில் பரபரப்பாக இருந்தது. ஆனால், காஷ்மீரில் உண்மையிலேயே பண்டிட்டுகள் கொலை இந்தப் படத்திற்குப் பின்னர் தான் அதிகரித்தது. இந்தப் படம் வெளியான பின்னரே காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் கொல்லப்படுவதும் அதிகரித்தது” என்று கூறியுள்ளார்.

சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், “கோவா திரைப்பட விழாவில் தேர்வுக் குழு தலைவர் லேபிட் பேசியதற்கு இஸ்ரேலிய தூதர் கண்டனம் தெரிவித்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. லேபிட், காஷ்மீரி பண்டிட்டுகள் பாதிக்கப்பட்டதை விமர்சிக்கவில்லை. அவர்களுக்கு ஏற்பட்ட அநீதியை விமர்சிக்கவில்லை. அதை அவர் மறுக்கவும் இல்லை. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படம் எப்படி சர்வதேச விழாவில் திரையிடலுக்கு தேர்வானது என்பதுதான் அவரின் கேள்வி, விமர்சனம். துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை ஒரு பிரச்சார படமாக்கியுள்ளனர் என்றே அவர் கூறியிருக்கிறார்” என தன் வாதத்தை முன்வைத்துள்ளார்.

வெறுப்பு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது: காங்கிரஸ்

லேபிடின் விமர்சனங்களை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, “இது தேசத்துக்கு தர்மசங்கமான சூழல். வெறுப்பை விதைத்தால் அது இப்படித்தான் வெளிப்படும்” என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சமூக வலைதளப் பிரிவு தலைவருமான சுப்ரியா ஸ்ரீனடே கூறுகையில், “பிரதமர் மோடி, பாஜக என அனைவரும் இந்தப் படத்தை புரோமோட் செய்தனர். இப்போது என்னவாயிற்று? ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவர் படத்தை நிராகரித்து இது மோசமான பிரச்சார திரைப்படம். இது மாதிரியான திரைப்பட விழாக்களில் திரையிட தகுதியற்ற்றது என்று கூறியுள்ளார். நீங்கள் விதைத்த வெறுப்பு இப்படித்தான் வெளிவரும்” என்று கூறியுள்ளார்.

அமித் மாலவியா கேள்வி? – “தி காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதன் மூலம் லேபிட், ஹோலோகாஸ்ட் திரைப்படத்தையும் எதிர்க்கிறார் என்றே அர்த்தம். ஹோலோகாஸ்ட், ஸ்க்லிண்டர்ஸ் லிஸ்ட் படங்களை நீண்டகாலமாக மக்கள் பிரச்சாரம் என்றே புறக்கணித்து வந்தனர். இப்போது அதேதான் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு நடக்கிறது. உண்மை நிச்சயம் வெல்லும்” என்று பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாலவியா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தூதர் கண்டனம்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பிரச்சார நெடி கொண்ட படம் என விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வுக்குழு தலைவரும், தன் சக நாட்டவருமான நடாவ் லேபிடுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடாவ் லேபிடுக்கு ஒரு திறந்த மடல். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மீது அவர் முன்வைத்த விமர்சனத்தை ஒட்டி இதை எழுதுகிறேன். இதனை எனது இந்திய சகோதரர்கள், சகோதரிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால் ஹீப்ரூவில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். அந்தக் கடிதம் சற்று நீளமானது. அதனால் ஒரு வரியில் அதனை விளக்குகிறேன்.

நடாவ், நீங்கள் வெட்கப்பட வேண்டும். இந்திய கலாசாரத்தில் விருந்தினரை கடவுளுடன் ஒப்பிடுவர். ஆனால், அதனை நீங்கள் எவ்வளவு மோசமாக சிதைக்க முடியுமோ அவ்வளவு மோசமாக சிதைத்துள்ளீர்கள். உங்களை கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவின் தேர்வுக் குழு தலைவராக அழைத்துள்ளார்கள். அவர்கள் உங்களுக்கு அளித்த மரியாதையை, அவர்கள் உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவா முதல்வர் அதிருப்தி

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், “லேபிடின் கருத்துக்கு நான் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரேலிய தூதர் கூட லேபிட் தனக்கு அளிக்கட்ட தளத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டார். இது தொடர்பாக தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் உரிய நடவடிக்கை எடுக்கும். லேபிட் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் கடினமானவை” என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை தொடர்பாக அரசியல் பிரபலங்கள் மட்டுமல்ல, படத்தின் இயக்குநர், நடிகர் உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிரடி கருத்துகளுக்கு பெயர்போன பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரும் இது பற்றி பேசியுள்ளார்.

அனுபம் கேர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொய் எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருந்தாலும் அது வீழ்ந்துவிடும். உண்மையின் முன்னால் அது தாக்குப் பிடிக்காது” என்று பதிவிட்டிருந்தார். முன்னதாக இன்று காலை மும்பை சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று திரும்பிய அவரிடம் செய்தியாளர்கள் காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட அதற்கு அவர், “இது வெட்கக்கேடானது. எல்லாமே திட்டமிட்டு நடந்துள்ளது. இது தொடர்பாக எங்கள் குழு கலந்தாலோசித்து வருகிறது. விரைவில் இது தொடர்பாக தகுந்த பதிலளிப்போம்” என்று கூறினார்.

இதேபோல் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பட்டத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், “காலை வணக்கம். உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும். #CreativeConsciousness” என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்வரா பாஸ்கர் ஆதரவு: பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த உலகுக்கே இந்த விஷயம் இப்போது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். இயக்குநர் நகோ லாபிடின் கருத்தை ஆதரித்து அவர் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளார். இவ்வாறாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ சர்ச்சை மீண்டும் பூதாகாரமாகி சமூக வலைதளங்களில் காரசார விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள…” – சினிமா வசனம் பேசி விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

Pagetamil

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

Pagetamil

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

Leave a Comment