ஹட்டன் பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இரவு பிள்ளைகளால் கைவிடப்பட்டதாக கூறப்படும் 65 வயதுடைய மூதாட்டியை பிரதேச மக்கள் மீட்டு, ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாவலப்பிட்டி பேரலுகசின்ன பகுதியைச் சேர்ந்த இந்திராணி குசுமா (வயது 65) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
சிவனொளிபாதமலை பருவத்தில் இந்த மூதாட்டியை அழைத்துக் கொண்டு, பிள்ளைகள் வழிபாட்டிற்காக வந்துள்ளனர்.
பின்னர் ஹட்டன் நகருக்கு வந்து ஹட்டன் காமினிபுர பிரதேசத்திற்கு வந்த போது பிள்ளைகளால் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மூதாட்டி வழங்கிய தகவலின் அடிப்படையில் நாவலப்பிட்டி பொலிஸாரின் ஊடாக அவரது உறவினர்களுக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதாட்டியை ஏற்றுக்கொள்ள உறவினர்கள் எவரும் முன்வராத பட்சத்தில், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி நீதவானின் உத்தரவுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸாரின் பிடியில் உள்ள தாய் தொடர்பில் மேலதிக தகவல் தெரிந்தால் அட்டன் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



