அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள பெண் அதிகாரி ஒருவரின் கைப்பையை திருடிய இரு கொள்ளையர்களை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் துணையுடன் மூன்று பொலிஸ் குழுக்கள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. .
இந்தக் கொள்ளைச் சம்பவம் ஒக்டோபர் 29ஆம் திகதி கொழும்பு 7 குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிகோரி வீதியில் இடம்பெற்றுள்ளது. இந்த அமெரிக்க அதிகாரி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.
விழா ஒன்றில் பங்கேற்பதற்காக, மாலையில் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு கொள்ளையர்கள் அவரது தங்கச் சங்கிலியை அபகரிக்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், தங்கச் சங்கிலியைப் பறிக்க முடியாமல் போன பின்னர், கொள்ளையர்கள் அவரது கைப் பையைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது கிரெடிட் கார்ட் மற்றும் மொபைல் போன் பையில் இருந்தது.
பொலிஸ்மா அதிபரிடம் அமெரிக்க தூதரக அதிகாரி முறைப்பாடு தெரிவித்திருந்தார்.
இதன்படி, கொழும்பு மத்திய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று அமெரிக்க தூதரக அதிகாரியின் இல்லத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.