25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

பொதுவாக வெங்காயத்துக்கு நாம் அளிக்கும் முக்கியத் துவத்தில் ஒரு சதவிகிதத்தைக்கூட வெங்காயத்தாளுக்குக் கொடுப்பதில்லை.

உண்மையில் ஏராளமான சத்துகளைத் தனக்குள் தக்கவைத்துக் கொண்டு அமைதி காக்கிறது வெங்காயத்தாள். இதில் நார்ச்சத்தும் இரும்புச்சத்தும் நிறையவே இருக்கின்றன. கல்சியமும் பொட்டாசியமும் மெக்னீசியமும் நிறைந்துகாணப்படுகின்றன. அவற்றோடு விற்றமின்கள் ஏ, சி, பி6 ஆகியவையும் உள்ளன.

சத்தும் சுவையும் நிறைந்த இந்த வெங்காயத்தாளைப் பயன்படுத்தி வித்தியாசமான ரெசிப்பிகள் சிலவற்றை பார்க்கலாம்.

வெங்காயத்தாள் சூப்

தேவையானவை:

வெங்காயத்தாள் (நறுக்கியது) – ஒரு கப்
தேங்காய்ப்பால் – 2 கப்
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
தக்காளி – ஒன்று (நறுக்கவும்)
ஸ்வீட்கார்ன் முத்துகள் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)
குடமிளகாய் (நறுக்கியது) – கால் கப்
அலசி ஆய்ந்த கொத்தமல்லித்தழை
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
சூப் பிஸ்கட் க்யூப் – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

தக்காளி, இஞ்சியை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் குடமிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். தக்காளி – இஞ்சி சாற்றை ஊற்றவும். உப்பு, ஸ்வீட் கார்ன் சேர்க்கவும். தேங்காய்ப்பால் ஊற்றி, மிதமான தீயில் அடுப்பை வைத்து சூப்பைக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி, சூப் பவுலுக்கு மாற்றி மிளகுத்தூள், சீரகத்தூள் தூவி, கொத்தமல்லித்தழை சேர்த்து, மேலே மொறுமொறு சூப் பிஸ்கட் தூவிப் பருகவும்.

வெங்காயத்தாள் உருளைக்கிழங்குக் கறி

தேவையானவை:

வெங்காயத்தாள் – ஒரு கட்டு (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
உருளைக்கிழங்கு – 2
சோம்பு – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
இஞ்சி – பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்
தக்காளி சோஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
கிரீன் சில்லி சோஸ்- ஒரு டேபிள்ஸ்பூன்
சீஸ் க்யூப் – 2
கஸூரி மேத்தி (உலர் வெந்தயக் கீரை) – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு -தேவைக்கேற்ப

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக விட்டு தோல் எடுத்து நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, சோம்பு, வெங்காயத்தாள் போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, தக்காளி சோஸ், கிரீன் சில்லி சோஸ் சேர்த்து மேலும் வதக்கவும். அனைத்தும் வெந்ததும் இறக்கி வைக்கும்போது சீஸ் க்யூப் சேர்த்து, கஸூரி மேத்தி தூவி ஒரு புரட்டு புரட்டி, அடுப்பை அணைக்கவும். வெங்காயத்தாள் உருளைக்கிழங்குக் கறி தயார்.

வெங்காயத்தாள் சாலட்

தேவையானவை:

வெங்காயத்தாள் (நறுக்கியது) – கால் கப்
கோதுமைப்பொரி – 2 டேபிள்ஸ்பூன் (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்)
தக்காளி (நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த ஸ்வீட்கார்ன் – 3 டேபிள்ஸ்பூன்
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – பாதியளவு (சாறு எடுக்கவும்)
நெய் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் தக்காளி, ஸ்வீட்கார்ன். உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் நெய்யில் வதக்கிய வெங்காயத்தாள், மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு ஓமப்பொடி, கொத்தமல்லித்தழை தூவி, கோதுமைப்பொரி சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.

வெங்காயத்தாள் காலிஃப்ளவர் கிரேவி

தேவையானவை:

வெங்காயத்தாள் (நறுக்கியது) – ஒரு கப்
காலிஃப்ளவர் (உதிர்த்த பூ) – 6
தேங்காய்ப்பால் – ஒரு கப்
கசகசா – ஒரு டீஸ்பூன்
முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
சின்ன வெங்காயம்- கால் கப் (தோல் உரிக்கவும்)
தக்காளி – ஒன்று (நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கிராம்பு – ஒன்று
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
இஞ்சி – கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)
பூண்டு – 3 பல்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முந்திரி, கசகசாவை நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்து, சுத்தம் செய்த காலிஃப்ளவர் பூ போட்டு வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது சேர்த்து மேலும் வதக்கி, முந்திரி விழுது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போக வதக்கி அடுப்பை மிதமான தீயில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்றிக் கொதிக்கவிடவும். அனைத்தும் வெந்ததும் அடுப்பை அணைத்து, வெண்ணெய் சேர்த்து, கொத்த மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

வெங்காயத்தாள் ஸ்டஃப்ட் மினி சப்பாத்தி

தேவையானவை:

வெங்காயத்தாள் (நறுக்கியது) – ஒரு கப்
கோதுமை மாவு – ஒரு கப்
ஓமம் – ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும்)
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – சிறிதளவு
ஆம்சூர் பவுடர் (உலர் மாங்காய்த்தூள்) – ஒரு சிட்டிகை
நெய் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
மாவு பிசைய: வெதுவெதுப்பான பால் – தேவைக்கேற்ப

செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அதனுடன் நெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்துப் பிசிறி, தண்ணீருக்குப் பதில் வெதுவெதுப்பான பால் விட்டு மிருதுவாக, கெட்டியாகப் பிசையவும். 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு மாவை சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக இட்டு பிஸ்கட் கட்டரால் சிறு சிறு வடிவமாக வெட்டிக்கொள்ளவும். தோசைக்கல்லில் நெய்விட்டு சூடானதும் மினி சப்பாத்திகளைப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். மயோனைஸ் உடன் பரிமாறவும்.

ஸ்பிரிங் ஒனியன் வித் பாஸ்தா

தேவையானவை:

பாஸ்தா – அரை கப்
வெங்காயத்தாள் (நறுக்கியது) – ஒரு கப்
பச்சை மிளகாய் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய விருப்பமான காய்கறிகள் – கால் கப்
தக்காளி சோஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
சோயா சோஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
அலசி ஆய்ந்த கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்
உப்பு, நெய் – தேவைக்கேற்ப
ரெடிமேட் பாஸ்தா ஸ்பிரெட் – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

காய்கறிகளை நீரில் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். பாஸ்தாவைக் கொதிக்கும் நீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு எடுத்து, குளிர்ந்த நீரில் அலசி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் வெங்காயத்தாள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது போட்டு மேலும் வதக்கவும். இதனுடன் வெந்த பாஸ்தா, காய்கறிகள் சேர்த்துக் கிளறி, பாஸ்தா ஸ்பிரெட், தக்காளி சோஸ், சோயா சோஸ் சேர்த்து, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழை போட்டுக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

வெங்காயத்தாள் வடை

தேவையானவை:

வெங்காயத்தாள் (நறுக்கியது) – ஒரு கப்
துவரம்பருப்பு – அரை கப்
கடலைப்பருப்பு – கால் கப்
முந்திரி – கால் கப்
பாதாம் – கால் கப்
பச்சை மிளகாய் – ஒன்று
காய்ந்த மிளகாய் – 2
அலசி ஆய்ந்த கொத்தமல்லித்தழை – சிறிதளவு
இஞ்சி – கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)
உடைத்த உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்குத்தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பு, உளுந்து, முந்திரி, பாதாம், துவரம்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்து, இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, கொத்தமல்லித்தழை, நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்துப் பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

வெங்காயத்தாள் சட்னி

தேவையானவை:

வெங்காயத்தாள் – ஒரு கட்டு (அலசி நறுக்கிக்கொள்ளவும்)
முழு உளுந்து – கால் கப்
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 3 பல்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
பச்சை வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, உப்பு தவிர மற்ற பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி எடுத்துக்கொள்ளவும். ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து உப்பு போட்டு, சிறிதளவு நீர்விட்டு மையாக அரைத்து எடுக்கவும். சின்ன வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.

இட்லி, தோசைக்கு வித்தியாசமான சுவையுடன் சட்னி தயார். இதை சுடு சாதத்தில் துவையல் மாதிரி நல்லெண்ணெய்விட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். மேலும் பிரெட் துண்டில் தடவியும் சாப்பிடலாம்.

வெங்காயத்தாள் பக்கோடா

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கப்
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
காராமணி – அரை கப்
அவல் – கால் கப்
இஞ்சி (தோல் சீவி, பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 4 பல் (தட்டிக்கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

காராமணியை நீரில் மூன்று மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும். அதை கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அலசிய அவல் மற்றும் மேற்கூறிய பொருள்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) ஒன்றாகப் போட்டு பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் மாவைக் கிள்ளியெடுத்து பக்கோடாக்களாகப் போட்டு வேகவிட்டு, திருப்பிப்போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

வெங்காயத்தாள் குடமிளகாய் பொரியல்

தேவையானவை:

வெங்காயத்தாள் (நறுக்கியது) – ஒரு கப்
சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் குடமிளகாய் (சதுரமாக நறுக்கியது) – அரை கப்
தேங்காய்த் துருவல்- 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – சிறிதளவு
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
முளைகட்டிய பச்சைப்பயறு – 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய், எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். இதனுடன் குடமிளகாய்கள் சேர்த்து வதக்கி, பச்சைப்பயறு, உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் தூவிப் புரட்டி இறக்கிப் பரிமாறவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

பிறப்புறுப்பில் உள்ள முடிகளை நீக்குவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும்?

Pagetamil

Leave a Comment